Published : 17 Sep 2020 07:19 AM
Last Updated : 17 Sep 2020 07:19 AM

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு, திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் உட்பட சட்டப்பேரவையில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று, அண்ணா பல்கலைக்கழகம் 2 ஆக பிரிப்பு உட்பட 18 சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதிநாளான நேற்று, பல்வேறு சட்ட முன்வடிவுகள் (மசோதாக்கள்) அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றை இன்றே ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும் என்ற துணை முதல்வரின் முன்மொழிவை ஏற்று, அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

நிதி ஒதுக்கம்

தமிழ்நாடு நிதிஒதுக்க சட்ட முன்வடிவு மற்றும் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல், தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை திருத்தம், மெட்ராஸ் பொருளியல் பள்ளி,தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு திருத்த சட்ட முன்வடிவுகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்தார்.

இதில், பொறுப்புடைமை திருத்தம், மெட்ராஸ் பொருளியல் பள்ளி சட்ட முன்வடிவுகள் மீது பேசிய, திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், ‘‘மத்திய அரசு வழங்கவேண்டிய ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படியான நிதியை பெற வேண்டும். மெட்ராஸ் பொருளியல் பள்ளியில் 35 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘அத்தொகைகளை கேட்டுப் பெறுவோம். மெட்ராஸ் பொருளியல் பள்ளியை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு இங்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள இடங்களிலும் தமிழக மாணவர்கள் பயில முடியும்’’ என்றார். பின்னர், அந்த முன்வடிவுகள் ஆய்வுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.

உள்ளாட்சி தனி அலுவலர்

தொடர்ந்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் வரை நீட்டிப்பதற்கான சட்டத் திருத்த முன்வடிவுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், கு.பிச்சாண்டி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், ‘‘கரோனா பரவல் குறைந்து சாதகமான சூழல் ஏற்பட்டதும் அப்பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்’’ என்றார். பிறகு, அந்த சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

அறக்கட்டளைகள்

தொடர்ந்து, தமிழ்நாடு நீக்கறவு சட்டம், திருமணம் நடைபெறும் பகுதியில் மட்டுமின்றி மணமகன், மணமகள் வசிப்பிடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திலும் திருமணத்தை பதிவு செய்வதற்கான திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம், நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு சட்டத்தில் திருத்தம், தமிழ்நாடு வழக்கறிஞர்களுடைய எழுத்தர்கள் நல நிதிய சட்டத் திருத்தம், தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்டம் ஆகியவற்றுக்கான சட்ட முன்வடிவுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிமுகம் செய்தார்.

இதில், பொது அறக்கட்டளைகள் சட்டம் குறித்து பேசிய திமுக உறுப்பினர் ரகுபதி, ‘‘பொதுஅறக்கட்டளைகள் சட்டம் கொண்டுவருவதன் மூலம், ஏற்கெனவே உள்ள அறக்கட்டளைகளை புதிதாக பதிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். அதற்கு பதிலாக, ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாம்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘தமிழகத்தில் பொது அறக்கட்டளைகளுக்கு தனியான சட்டம் இல்லை. எனவே, அறக்கட்டளைகள் உருவாக்கம், இடம், நிர்வாகிகளுக்கான தகுதிகள், அதன் பணிகள், நோக்கம் உள்ளிட்டவற்றை வரையறுக்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பழமையான அறக்கட்டளைகள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அதில் இருந்து மாறி தற்போது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நிலையை மாற்றவே இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார். தொடர்ந்து அந்த முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டன.

அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்த அண்ணா பல்கலை. சட்டத்தில் 2 திருத்தங்கள் செய்வதற்கான சட்ட முன்வடிவுகளை உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிமுகம் செய்தார்.

இதுகுறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தை திமுக ஆட்சியில் நிர்வாக ரீதியாக 4 ஆக பிரித்து வைத்திருந்தோம். தற்போது 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள இணைப்புகல்லூரிகளை நிர்வகிக்க மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலியில் பல்கலைக்கழகங்களை மீண்டும் அமைக்க வேண்டும்’’ என்றார்.

பிரிக்கப்படும் காரணம்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பழகன், ‘‘அண்ணா பல்கலை.யின் 13 உறுப்பு கல்லூரிகள், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (எம்ஐடி) ஆகியவற்றை உள்ளடக்கி, ஆராய்ச்சி மீது கவனம் செலுத்தும் வகையில் அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், தமிழகத்தில் உள்ள இதர பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை கண்காணிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் என்றும் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இணைப்பு கல்லூரிகளை நிர்வகிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார். இதையடுத்து, முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன.

மற்ற சட்ட முன்வடிவுகள்

போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கி நிர்வகிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ‘ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’க்கான சட்ட முன்வடிவை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான மதிப்புக் கூட்டுவரி சட்டத் திருத்தத்தை அமைச்சர் கே.சி.வீரமணி, கூட்டுறவு சங்கங்கள் 3-வது திருத்த சட்டத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜு அறிமுகம் செய்தனர். இவையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x