

மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், மின்வாரிய நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும்தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கண்டித்தும் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மின்வாரிய நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் தொழிற்சங்க விரோத நடவடிக்கையைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிரான தன்னிச்சையான உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது. கரோனா தொற்றால் இறந்த மின்வாரியத் தொழிலாளருக்கும் இதர துறைகளுக்கு வழங்கியதுபோல் ரூ.25 லட்சம் நிதி வழங்கவேண்டும், துணை மின் நிலையங்களை குத்தகைக்கு விடக் கூடாது. வேலைப் பளு ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட பதவிகளை ரத்து செய்ததை திரும்பப் பெறவேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் பணிக்கு வர இயலாத நாட்களுக்கு அரசாணை 304-ன்படி சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும், ரத்து செய்த சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியு செங்கல்பட்டு கிளைச் செயலாளர் என்.பால்ராஜ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் சார்பில் வேலன், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க மாநில துணைப் பொதுச் செயலர் சர்க்கரை, எஇஎஸ்யு தொழிற்சங்க சென்னை மண்டலச் செயலர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் மற்றும் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.