

கொடைக்கானலுக்கு பேருந்தில் செல்பவர்கள் இ-பாஸ் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையில் சிக்கல் உள்ளதாக இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலியாக பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இ-பாஸ் அவசியம் இல்லை, என கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல வெளி மாவட்டப் பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட அடையாளஅட்டையை காண்பித்து செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் இருந்து வருபவர்களுக்கும் இ-பாஸ் அவசியம் என அறிவிக்கப்படாத விதிமுறை மற்றும் பேருந்தில் இ பாஸ் இன்றி வந்தவர்கள் பாதிவழியில் இறக்கிவிடப்படுவது என பயணிகள் அவதிக்குள்ளாவது தொடர்ந்தது.
இதையடுத்து இந்து தமிழ் நாளிதழில், பேருந்தில் பயணம் செய்பவர்கள் இ-பாஸ் விண்ணப்பிக்க வாகன எண், வாகனத்தின் வகை உள்ளிட்டவைகளைப் பதிவு செய்யவேண்டும்.
ஆனால் பேருந்தில் பயணம் செய்பவர்கள் எந்த வாகனத்தில் எண்ணை பதிவு செய்வது என்ற குளறுபடி ஆகியவை குறித்து இந்து தமிழ் ஆன்லைன் செய்தியில் வெளியானது.
இதிலுள்ள சிக்கல்கள், பயணிகள் அவதிக்குள்ளாவது ஆகியவற்றை அறிந்த கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன், கொடைக்கானலுக்கு பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இ-பாஸ் அவசியம் இல்லை என உத்தரவிட்டார்.
மேலும் சுற்றுலாத்தலங்கள் அனைத்து படிப்படியாக திறக்கப்படும் என்றும் கூறினார்.