

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவிடும் பிளாஸ்மா சிகிச்சைக்குத் தேவையான பிளாஸ்மாவை சேகரிக்கும் பிளாஸ்மா வங்கி சேலம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க, உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தற்போது பிளாஸ்மா சிகிச்சையும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வரிசையில், பிளாஸ்மா சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனை சார்பிலும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளாஸ்மா தானம் பெறக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மீண்ட மருத்துவர் ஒருவர், இன்று (செப். 16) பிளாஸ்மா தானம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
பிளாஸ்மா தானம் குறித்து, சேலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் கூறுகையில், "சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில், பிளாஸ்மா தானம் பெறுவதற்காக, பிரத்யேக கருவி மொத்தம் ரூ.40 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி, ஒருவரிடம் இருந்து ரத்த தானம் பெறுவது போல, ரத்தம் பெறப்பட்டு, அதில் இருந்து உடனடியாக நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட திரவம் மட்டும் பிரிக்கப்பட்டு எடுக்கப்படும். அவரது, ரத்த செல்கள் அவரது உடலிலேயே செலுத்தப்படும்.
எனவே, அடுத்த 72 மணி நேரத்தில் மீண்டும் பிளாஸ்மா தானம் வழங்க முடியும். ஒருவரது உடலில் இருந்து எடுக்கப்படும் 600 மி.லி. பிளாஸ்மைப் பயன்படுத்தி, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
தானத்துக்கான தகுதி
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் 14 நாட்களுக்குப் பின்னர், கரோனா நெகட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்தால், அவர் பிளாஸ்மா தானம் வழங்க முடியும். பிளாஸ்மா தானம் வழங்குபவர்கள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முடியாது.
தற்போது, சேலத்தைச் சேர்ந்த செல்வகளஞ்சியம் என்ற மருத்துவர், கரோனா தொற்றில் இருந்து மீண்டு, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். கரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு வசதியாகவும், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் தானமாகப் பெறப்படும் பிளாஸ்மாவை, இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும். ஒருமுறை சேகரிக்கப்படும் பிளாஸ்மாவை 6 மாதம் வரை பாதுகாத்து, பயன்படுத்த முடியும்" என்றார்.