Published : 16 Sep 2020 06:52 PM
Last Updated : 16 Sep 2020 06:52 PM

2020-21 ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடு: சட்டப்பேரவையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் தாக்கல்

2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளாக ரூ.12,845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கான ஒப்புதலுக்காக சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் தாக்கல் செய்தார். இதில் அதிகபட்ச செலவு கரோனா சிகிச்சை மற்றும் நிவாரணத்துக்காக என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16 ஆம் நாளன்று சட்டப்பேரவை முன் வைத்து ஆற்றிய உரை.

“ 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவானதொரு அறிக்கை இம்மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் 12,845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.

இந்நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே கரோனா நோய்த் தொற்று நம் அனைவரையும் பாதித்துள்ளதால், இந்த ஆண்டு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதிகள் வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்க நிதியுதவி வழங்குதல், பொது விநியோக அமைப்பின் மூலம் கூடுதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல் மற்றும் அதற்கு உண்டான நிர்வாகச் செலவுகள் ஆகிய இனங்களில் பெருமளவில் கூடுதல் செலவினங்களை மாநில அரசு செய்துள்ளது.

ஆகவே, இந்த ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளின் அளவு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. கரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இத்துணை மானியக் கோரிக்கையில் மொத்தம் 9,027.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* 2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ‘புதுப் பணிகள்’ மற்றும் ‘புது துணைப்பணிகள்’ குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

* கரோனா நோய்த் தொற்றினால் பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குதல் மற்றும் பொது விநியோகக் கடைகளிலிருந்து வழக்கத்திற்கு அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுவதாலும், 3,359.12 கோடி ரூபாய் கூடுதல் தொகை சேர்ப்பு.

* கரோனா நோய்த் தொற்று நிவாரண உதவியாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும் ரொக்கப் பண உதவியை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து வழங்குவதற்காக, அரசு 3,168.64 கோடி ரூபாய் அனுமதி. இதைத் தவிர, கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1,049.56 கோடி ரூபாய் என மொத்தம் 4,218.20 கோடி ரூபாய் அனுமதி.

* 1,109.42 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைக்கு கரோனா நோய்த் தொற்று மருந்துகள், ஆர்டிபிசிஆர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்முதலுக்காகவும், உள் நோயாளிகளுக்கான உணவுச் செலவினங்களுக்காகவும், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதாரத் துறையின் நிறுவனங்களில் உள்ள மருத்துவ சேவை அவசர ஊர்தி வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், அனுமதி.

* தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதனக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்காக கூடுதல் பங்கு மூலதன உதவியாக அரசு 437 கோடி ரூபாய் அனுமதி.

* மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 14வது மத்திய நிதி ஆணையத்தின் இரண்டாம் தவணை பொது அடிப்படை மானியத்தை வழங்குவதற்காக அரசு 987.85 கோடி ரூபாய் அனுமதி.

* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு, தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கு ஏதுவாக, மின் உற்பத்திக்கான நிலுவைத் தொகைகளை வழிவகை முன்பணமாக அரசு 170.28 கோடி ரூபாய் அனுமதி.

* தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்திட வேளாண் துறைக்கு 107.40 கோடி ரூபாய் அரசு அனுமதி.

* விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினைச் செயல்படுத்த மாநில அரசின் மானியமாக 316.80 கோடி ரூபாய்க்கு அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமம் மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் பண்ணைகிணறு கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க 82.60 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

* திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்காகவும், பல்வேறு இடங்களில் 8 புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 6 வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும், 16 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 14 வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும் அரசு 645.26 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது.

* அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்காகவும், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்காகவும் 580.87 கோடி ரூபாய் அனுமதிக்க அரசு உத்தேசித்துள்ளது.

* புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் மூலதன மானியமாக 100 கோடி ரூபாய் வழங்க துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண்.44 – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

* 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகிறேன்”.

இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x