மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கடலாடி அருகே பெண்கள் நூதன வழிபாடு 

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கடலாடி அருகே பெண்கள் நூதன வழிபாடு 
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இரவில் பெண்கள் மட்டும் கோழிகளை பலியிட்டு அதனை கோயில் வளாகத்திலேயே சமைத்து உண்ணும் வினோத திருவிழா நடைபெற்றது.

கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் ஆவாரங்காடு காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் மற்றும் பெண் வாரிசுதாரர்கள் மட்டுமே காலம் காலமாக ஆவணி மாதத்தில் அம்மனை வழிபட்டு வருகின்றனர்

இந்நிலையில் இந்தாண்டு நேற்று இரவு புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் வாரிசுதாரர்கள் ஒவ்வொரு குடும்பங்களாக கோயிலுக்கு வந்து முட்டையிட்ட கோழிகளை காளியம்மன் கோயிலுக்கு பலியிட்டு அதனை கோயில் வளாகத்தில் சமைத்து பெண்கள் மற்றும் பெண் வாரிசுதாரர்கள் மட்டுமே சாப்பிட்டனர். பின்னர் மிஞ்சிய உணவுகளை கோயில் வளாகத்திற்குள்ளேயே குழிதோண்டி புதைத்துவிடுவதாக பெண்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆவாரங்காடு காளியம்மனுக்கு பொங்கல் வைப்பதற்கு என்று புதிய நெல்மணியை அரைத்து, அதிலிருந்து கிடைக்கும் அரிசியைக் கொண்டு பொங்கல் வைப்பதாகவும், எண்ணெய், உப்பு, சர்க்கரை உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருட்களை வீட்டிலிருந்து கொண்டு வராமல், புதிதாக கடையிலிரு்து வாங்கி வந்து சமைப்பதாகவும், இது காலம் காலமாக வழிபட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

காளியம்மன் கோயிலுக்கு பெண்கள் மற்றும் பெண் வாரிசுதாரர்கள் கோழிகளை பலியிட்டு வழிபடுவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வழிபாடு நடைபெறுவதாக பெண்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in