

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் வைத்த முறையீட்டை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழக்கை விசாரிக்கிறது.
தமிழக அரசால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிமைக் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு, 2017-ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், பேரவை உரிமைக் குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்எல்ஏக்கள் அவர்களின் கருத்துகளை அக்குழுவிடம் முன்வைக்கலாம் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு செப்டம்பர் 7-ம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்கும் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்பேரவை தொடங்கிய செப்டம்பர் 14-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புதிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கை நாளை (செப்.17) விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.