Published : 16 Sep 2020 04:12 PM
Last Updated : 16 Sep 2020 04:12 PM

புதிய கல்விக் கொள்கை; வல்லுநர் குழு முடிவு வந்தவுடன் சாதக, பாதங்களை ஆராய்ந்து முடிவு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பதில்

சென்னை

புதிய கல்விக் கொள்கை குறித்து முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். ஆய்வு செய்வதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழு கொடுக்கின்ற அறிக்கையை நாம் பரிசீலிக்கலாம். எது, எது நமக்கு சாதக, பாதகங்கள் என்பதை அறிந்து அதற்குத் தக்கவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அளித்த விளக்கம்:

''புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி விளக்கமாக, தெளிவாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதை ஆய்வு செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பாக கல்வியாளர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவும், அதேபோல உயர்கல்வித் துறை சார்பாக ஒரு வல்லுநர் குழுவும் அமைக்க உத்தரவிடப்பட்டு அந்தப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

அதில் தெரிவிக்கின்ற கருத்துகளின் அடிப்படையிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்ன கருத்துகளையும் அரசு ஆராயும். காங்கிரஸ் கட்சியினுடைய சட்டப்பேரவைத் தலைவர் திசையை மாற்றுகிறார். நாங்கள் மறுக்கவில்லை. திட்டவட்டமாக இங்கே தெரிவித்திருக்கின்றோம். எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதில் பின்வாங்குவது கிடையாது.

உங்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் கொண்டு வந்தீர்கள். நீங்கள் பேசுகிறீர்கள், வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் திட்டம் எல்லாம் கொண்டு வந்தது. மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தீர்கள். அண்ணா சொன்னார், முன்னாள் பிரதமர் நேரு உறுதிமொழி கொடுத்தார்கள். அதனால் நீங்கள் இதை ஆழமாகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் மீது எடுத்துக் கொண்ட அக்கறைக்கு நன்றி.

ஆகவே, அதிமுகவும் சரி, அதிமுக அரசும் சரி, தொடர்ந்து இருமொழிக் கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம். இது தேசிய கல்விக் கொள்கை. ஒரு கொள்கை வருகின்றபொழுது அதை ஆய்வு செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்வதற்குத்தான் பள்ளிக் கல்வித்துறை சார்பாகவும், உயர் கல்வித்துறை சார்பாகவும் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுக்கள் கொடுக்கின்ற அறிக்கையைப் பொறுத்து நாம் முடிவு செய்யலாம். இதில் வேறு ஒரு கருத்தும் கிடையாது.

எங்கெங்கேயோ திசை திருப்புகின்றீர்கள். உங்களால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் பெற முடியவில்லை. நீட் தேர்வைச் சொன்னீர்கள். நான் பேசக்கூடாது என்று இருந்தேன். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரே பேசுகின்றபொழுது, அதைப் பற்றி பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். 2010-ல் யார் ஆட்சியில் இருந்தார்கள்? தயவுசெய்து மனசாட்சியோடு சொல்லுங்கள். காங்கிரஸ் கட்சிதான் இருந்தது.

அதை யார் கொண்டு வந்தது, காங்கிரஸ் கட்சி. மீண்டும் சீராய்வு மனு யார் போட்டது? காங்கிரஸ். இவ்வளவு செய்துவிட்டுப் பேசுகின்றீர்களே? நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குப் பதில் சொல்கின்ற நிலையில் நீங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். வெளியில் சென்றால் எல்லோரும் கேள்வி கேட்பார்கள், எல்லோரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா செய்தியும் வெளியில் வருகிறது. எது உண்மைக்குப் புறம்பான செய்தி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

இதற்குள்ளே நான் ஆழமாகச் செல்லவில்லை. ஏனென்றால் காலநேரம் போதுமானதாக இல்லை. இதை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். ஆய்வு செய்வதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழு கொடுக்கின்ற அறிக்கையை நாம் பரிசீலிக்கலாம். எது, எது நமக்கு சாதக, பாதகங்கள் என்பதை அறிந்து அதற்குத் தக்கவாறு அரசு நடவடிக்கை எடுக்கும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x