

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதனை தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப்போருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
மேலும், தெற்கு மாவட்ட பாஜக வணிகர் பிரிவு சார்பில் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே 71 அடி உயர கொடிக்கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடி கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, வணிகர் சங்க மாநில செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன், மாவட்ட செயலாளர் கே.பழனிவேல், மாவட்ட தலைவர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் நிச்சயமாக போட்டியிடுவார். வேட்பாளர் யார் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும்.
நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வது வருத்தம் அளிக்கக்கூடிய செயல். மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேர்வு குறித்த அச்சத்தை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களை வைத்து அரசியல் செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம் எதுவும் இல்லை. வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நினைத்துதான் அவர்கள் குழம்புகின்றனர். 3 தலைமுறையாக அவர்கள் இதையையேத்தான் செய்கின்றனர். நீட்தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்து வருகின்றனர். ஆகவே மாணவர்கள் அவர்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய போகிறோம் என மு.க. ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட போவது முதல்வரை தான், பிரதமரை அல்ல.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகத்தின் பிரச்சினைகளை முன்வைத்தால் ஆக்கபூர்வமான தீர்வுகள் கிடைக்கும். அதை விட்டுவிட்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முகக்கவசம் அணிந்து செல்வது என்பது வேடிக்கையானது. அவர்கள் வாயை மூடுவதற்கு பதிலாக முழுவதுமாக மூடிக் கொண்டால் எல்லாம் சரியாக இருக்கும் என்றார் அவர்.