உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் வளர்ந்துள்ளது: நபார்டு தலைவர் பேட்டி
விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாக நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா தெரிவித்தார்.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணர் கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் பங்குதாரர்களை கொண்டு இயங்கும் சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா பார்வையிட்டார்.
அப்பொழுது மதிப்பு கூட்டுப் பொருள் தயாரிக்கும் முறைகளையும் அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். புதிய இயந்திரங்களை இயக்கி வைத்து உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு. நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது.
இதுபோன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்குதாரர்களை கொண்டு இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. இதுபோன்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் நபார்டு வங்கி குறைந்த வட்டியில் பல்வேறு வகையான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுமார் 90 லட்சம் வியாபார குழுக்களுக்கு நபார்டு வங்கி கடனுதவி அளித்துள்ளது.
உணவுப் பொருள் உற்பத்திக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளோம். இரு தினங்களில் தமிழக முதல்வரை சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.
அப்பொழுது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் உரம் தயாரிக்க திட்டங்கள் வழங்குமாறு கூறவுள்ளேன். தனி நபரால் சாதிக்க முடியாததை குழுவாக இருந்து விவசாயிகள் சாதிக்க முடியும்.
நாட்டில் சுமார் 12 கோடி கழிப்பறைகளுக்குத் தண்ணீர் வசதி இல்லாததால் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்காக கழிப்பறைகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு கடனுதவி திட்டத்தையும் அக்டோபர் 2ம் தேதி தொடங்க உள்ளோம்.
கரோனா காலத்தில் விவசாய குழுக்களுக்கு குறைந்த வட்டியில் நபார்டு வங்கி பல்வேறு கடன் உதவிகளை வழங்கியுள்ளது. அதன்மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது குடும்ப பெண்கள் என்பதால் அவர்களுக்கு குழு சார்ந்த கடன்கள் வழங்குவதில் நபார்டு வங்கி தனி கவனம் செலுத்தியது.
பெண்களுக்கு கடன் வழங்குவதன் மூலமாகவும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலமாகவும் கிராம பொருளாதாரமும் அதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.
