நீட் விவகாரம்: மாணவர்கள் இறந்து போராடுவதை விட இருந்து போராட வேண்டும்; சீமான் வேண்டுகோள்

சீமான்: கோப்புப்படம்
சீமான்: கோப்புப்படம்
Updated on
1 min read

மாணவர்கள் இறந்து போராடுவதை விட இருந்து போராட வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை, ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு சீமான், கட்சியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இந்தியாவிலேயே முதன்மையான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் தமிழகம். எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் அதிகபட்சமாக வட இந்தியர்களே உள்ளனர். அவர்கள் படித்துவிட்டு தமிழக மக்களுக்கு எப்படி மருத்துவம் பார்ப்பார்கள்? தேர்வை நடத்தும் ஆசிரியர்களே வட இந்திய மாணவர்கள் பார்த்து பதில் எழுத அனுமதிக்கின்றனர்.

கரோனா தொற்றை மீறி வெளியில் வந்து தேர்வெழுதும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக மருத்துவர்களை இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரிக்க வேண்டாம் எனத் தமிழக அரசு சொல்ல வேண்டும். அதைத் துணிந்து சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் உலகத்திற்கு வழிகாட்டியவன் தமிழன்.இதிலும் தமிழன்தான் வழிகாட்டுவான்.

நீட் தேர்வு குறித்து சூர்யா தெரிவித்த கருத்துக்கு தமிழன் மட்டுமல்லாமல் எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும். அவருடைய கருத்து நியாயமானது. அகரம் அறக்கட்டளையிலிருந்து ஒரு மாணவரைக் கூட நீட் தேர்வில் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்கிறார். எங்களுக்கெல்லாம் மருத்துவக் கனவு வரக்கூடாதா? சூர்யாவை ஆதரித்த நீதிபதிகளுக்கு என்னுடைய நன்றி. அவரை எதிர்க்கும் நீதிபதிகள் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

நீட் தேர்வு தேவையில்லை. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். இதற்கு கடுமையான சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

எத்தனையோ போராட்டங்களில் நாம் உயிர்களை இழந்திருக்கிறோம். ஆட்சியிலிருப்பவர்கள் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். பாஜக மனித குலத்தின் எதிரி. மாணவர்கள் இறந்து போராடுவதை விட இருந்து போராட வேண்டும். அவர்கள் இறந்தும் ஒன்றும் நடக்கவில்லை. உயிரைக் கொடுப்பதை மாணவர்கள் நிறுத்த வேண்டும். மாணவர்கள் இறப்புக்கு பிரதமர் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை".

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in