திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிப்பு; விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிப்பு; விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு:

" ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல அரசு கலைக் கல்லூரிகளையும், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும், பிற உயர்கல்வி நிறுவனங்களையும் தொடங்கினார்.

ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசும், பல உயர்கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து உருவாக்கியும், பல உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் மற்றும் மூலை முடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவு நனவானது.

இதன் காரணமாகத்தான் அகில இந்திய அளவில் 26.3 விழுக்காடு என இருக்கும் மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் மிக அதிகமாக, அதாவது 49 விழுக்காடு என்ற அளவில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டத்துறை அமைச்சரின் கோரிக்கை மற்றும் விழுப்புரம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்படத் தொடங்கும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் எதிர்ப்புத் தெரிவித்தார். ''கலைஞர் உருவாக்கிய பல்கலைக்கழகம் என்பதாலேயே வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறதா? தொகுதி எம்எல்ஏ என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை'' என துரைமுருகன் ஆட்சேபம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in