'பிக் பாஸ்' போல வீட்டுக்குள் இருந்தபடி கமல்ஹாசன் அரசை விமர்சனம் செய்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வராமல் துரோகம் இழைத்துவிட்டது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப். 16) சென்னை, கிண்டி ஹால்டா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகத்தில் கோவிட் தொற்றுப் பரவல் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 150 நாட்களாகிவிட்டன. 'பிக் பாஸ்' வீட்டில் 100 நாட்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வருபவர்களுக்குப் பரிசுப் பணம் வழங்கப்படும். 150 நாட்களுக்கு மேலாக நாங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைச் சந்தித்து களப்பணியாற்றுகிறோம். ஆனால், அவர் என்றைக்காவது வெளியில் வந்தாரா? 'பிக் பாஸ்' போல வீட்டுக்குள் இருந்தபடி கமல்ஹாசன் அரசை விமர்சனம் செய்கிறார்" என்றார்.

மேலும், 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டு வராமல் துரோகம் இழைத்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in