Published : 16 Sep 2020 11:30 AM
Last Updated : 16 Sep 2020 11:30 AM

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சரத்குமார்

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, சரத்குமார் இன்று (செப். 16) வெளியிட்ட அறிக்கை:

"மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தெருவோரக் குப்பைகளை அகற்றும்போதும், வீடுகள்தோறும் குப்பைகளைச் சேகரிக்கும்போதும், மாநகராட்சி லாரிகள், மூன்று சக்கர, இருசக்கர வாகனங்களில் சேகரித்த குப்பைகளைக் கொண்டு செல்லும்போதும் பெரும்பாலும் கையுறை மற்றும் முகக்கவசம் அணியாமல் பணியில் ஈடுபடுகின்றனர்.

கரோனா தொற்று சமயத்தில் சுகாதாரமான இடங்களுக்குச் சென்று வந்தால் கூட, சானிடைசர் கொண்டு கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து வருகிறோம். ஆனால், சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் அசுத்தமான பகுதிகளைச் சுத்தம் செய்வது வேதனை அளிக்கிறது.

அவர்களுக்குக் கையுறைகள் வழங்கப்படுகின்றதா அல்லது வழங்கப்படுகின்ற கையுறைகளைப் பயன்படுத்தாமல் உள்ளனரா எனத் தெரியவில்லை. அவர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதி, மீண்டும் உபயோகிக்கக்கூடிய ரப்பர் கையுறைகள் வழங்கப்பட்டு, அவர்கள் அதைப் பயன்படுத்துவதையும், முகக்கவசங்கள் அவசியம் அணிவதையும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசு அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x