இலவச அரிசி மற்றும் ரொக்கம் ஆகியவை பெற்றுக்கொண்ட புதுச்சேரி சவரிராயலு அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி குழந்தைகள். படம்: எம்.சாம்ராஜ்
இலவச அரிசி மற்றும் ரொக்கம் ஆகியவை பெற்றுக்கொண்ட புதுச்சேரி சவரிராயலு அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி குழந்தைகள். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரிசியுடன் ரொக்கப் பணம்: ஊரடங்கு காலத்தில் 43,175 மாணவர்கள் பயனடைவர்

Published on

ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரியில் அரிசி யுடன் ரொக்கப் பணம் தரும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 43,175 மாணவர்கள் பயனடைவர்.

கரோனா ஊரடங்கால் பள்ளிகள்மூடப்பட்டிருக்கும் நிலையில், மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டு தலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசியும், உணவு பாதுகாப்பு ஊக்கத்தொகை நேற்று முதல் அவரவர் படிக்கும் பள்ளிகளில் வழங்கப்பட்டது.

முதல் தவணையாக 1 முதல் 5-ம் வகுப்பு படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ. 290 ரொக்கம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ. 390 ரொக்கம் வழங்கப்படுகிறது.

நேற்று 1, 2-ம் வகுப்பு குழந்தைகள் அரிசி, ரொக்கத்தை பெற்றனர். 16-ம் தேதி (இன்று) 3, 4-ம் வகுப்புகளுக்கும், 17-ம் தேதி (நாளை) 5, 6-ம் வகுப்புகளுக்கும், 18-ம் தேதி 7, 8-ம் வகுப்புகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையே, காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வியமைச்சர் கமலக்கண்ணன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர், “ புதுச்சேரி மாநிலம் முழுவதும் 43,175 மாணவர்களுக்கு மொத்தம் 173 டன் அரிசியும், ரூ.1.43 கோடி ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோருக்கு இது உதவியாக இருக்கும். அவர்கள், இத்தொகையைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கு முட்டை, சத்தான காய்கறிகள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் நல்லெழுந்தூர், சேத்தூர், பண்டாரவடை, முப்பெய்த்தங்குடி, நல்லம்பல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இப்பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in