Published : 16 Sep 2020 10:56 AM
Last Updated : 16 Sep 2020 10:56 AM

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிப்பு; விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும்: திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பால் போராட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர்

விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாநில அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து, காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

விவசாய விளைநிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது, மாற்று வழியில் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும், கரோனா காலத்தை பயன்படுத்தி திட்ட பணிகளை நிறைவேற்றுவதை கைவிட வேண்டும், 2013- ஆண்டுகெயில் எரிவாயு குழாய் திட்டத்தில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி தமிழக அரசு இத்திட்டத்தையும் சாலையோரமாக செயல்படுத்துவதாக அறிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் கண்டியன்கோவில் கருங்காளிபாளையத்திலுள்ள விவசாய நிலத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர்ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளருமான ஆர்.குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் கருங்காளிபாளையம் கே.பாலசுப்பிரமணி வரவேற்றார். பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எஸ்.குமார்தொடங்கி வைத்தார்.

போராட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில், மாவட்ட நிர்வாகத்தின் பிரதிநிதியாக திருப்பூர் கோட்டாட்சியர் கவிதா அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் உறுதியான முடிவை அறிவிக்க வேண்டுமென, போராட்டக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு, மாற்று திட்டமாகசாலையோரமாக கொண்டு செல்வது குறித்து அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்வது, அதுவரை ஐ.டி.பி.எல்.திட்டப் பணிகள் அனைத்தையும் நிறுத்திவைப்பது, வரும் 23-ம் தேதிகாங்கயத்தில் நிலம் எடுப்புஅதிகாரியால் அறிவிக்கப்பட்டிருந்த விசாரணை ஒத்திவைக்கபடுகிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாக விவசாய சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் சண்முகவேல், கண்டியன்கோவில் ஊராட்சி தலைவரும், பிஏபி பாசன சபைத் தலைவருமான டி.கோபால், பொங்கலூர் ஒன்றிய திமுக செயலாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x