

திருப்பூர்
மலையாள குறும்படத்தில் நடித்த திருப்பூரை சேர்ந்த சிறுமிக்கு அமெரிக்கவிருது கிடைத்துள்ளது. திருப்பூர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர் பி.யூ.கிருஷ்ணன். இவரது மகள் மகா ஸ்வேதா, தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இளம் வயதிலேயே கலை திறனில் ஆர்வம் கொண்ட இவர், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கஜேந்திர வாவா என்ற இயக்குநரின் ‘கிராண்ட்மா டாய்’ என்ற மலையாள குறும்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் 2-ம் தேதி யூ-டியூப் தளத்தில் வெளியானது. மேலும், இந்த குறும்படம் அமெரிக்காவின் வெகாஸ் மூவி அவார்ட்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நேற்று முன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மேற்குறிப்பிட்ட குறும்படத்தில் நடித்த சிறுமி மகா ஸ்வேதாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை பி.யூ.கிருஷ்ணன், ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘நூறு நாடுகளின் சிறந்த படங்கள், இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்டன. இதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை நட்சத்திரம் பிரிவில், மகளுக்கு விருது கிடைத்துள்ளது. படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’என்றார். இந்த சிறுமி ‘ஆரோடு பரயும்' என்ற குறும்படத்துக்காக 'லாஃபா' விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.