

வன உயிரின பாதுகாப்பு, மனித-விலங்கு மோதல் குறித்து விவாதிப்பதற்காக தமிழக - கேரள வனத் துறை அதிகாரிகள் இடையேயான கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இதில், கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், கோவை மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ், நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, பாலக்காடு தலைமை வன உயிரின காப்பாளர் விஜயானந்தன், பாலக் காடு, நிலம்பூர், மன்னார்காடு வன அலுவலர்கள், பல்வேறு வனச் சரக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் கூறியதாவது:
இரு மாநிலங்களுக்கு இடையே விலங்குகள் நடமாட்டத்தை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கென தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட உள்ளது.
தமிழக, கேரள பகுதிகளில் வேட்டையாடுதல், சந்தன மரம் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியலை பகிர்ந்துகொள்வது எனவும், தேவைப்படும்போது இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க கூட்டு நடவடிக்கைகளை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது என்றார்.