

பிரதமரின் கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு விவகாரத்தில், இதுவரையில் 14 மாவட்டங்களில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமரின் கிசான் உதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிசிஐ போலீஸார் விசாரித்து வருகின்றனர். இத்திட்டத்தில் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்தார்.
இம்மோசடி தொடர்பாக எஸ்பி விஜயகுமார் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும், தனித்தனியாக 14 வழக்குகள் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி விஜயகுமார் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மோசடியில் 7 ஒப்பந்த ஊழியர்கள்கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வல்லம் உதவி வேளாண் அலுவலர்கள் சாவித்திரி (34), ஆஷா (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் துறை ரீதியாக பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 3 பேர் பணியிடை நீக்கம், 13 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்சுமார் ரூ.14.5 கோடி திரும்ப பெறப்பட்டு, கிசான் திட்டத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர். இம்மாவட்டத்தில் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 7 பேரை கைதாகி உள்ளனர்.
கிசான் நிதியுதவி திட்டத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டு போலி பயனாளிகளைச் சேர்த்த உளுந்தூர்பேட்டை அருகே கீழ் குப்பத்தைச் சேர்ந்த தமிழரசன் (21), கொங்கராயப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.