

கிருஷ்ணகிரி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும், திருச்சி கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மீரா என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு பெற்றோர்களால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. விஜயகுமார் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நரணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மீரா பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருகிறார். இருவரும் பர்கூர் பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கி பணிக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் மீரா கர்ப்பமானார். கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் மீராவுக்கு வளைகாப்பு செய்ய திருச்சியிலிருந்து பெற்றோர்களால் வர இயலவில்லை. இதனையறிந்த இன்ஸ்பெக்டர் கற்பகம், மீராவுக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்த முடிவு செய்தார். காவல் நிலையத்தில் 5 வகை சாதம் மற்றும் 5 தட்டுகளில் சீர்வரிசை, இனிப்பு, காரம் ஆகியவற்றுடன், மீரா மற்றும் அவரது கணவர் விஜயகுமாரை அழைத்து வந்து அமர வைத்து வீட்டில் பெற்றோர்கள் செய்யும் வளைகாப்பு போல இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில், தலைமை காவலர்கள் மகாலட்சுமி, தனலட்சுமி, கிருஷ்ணவேணி, சுமதி, போலீஸார் கலைராணி, நிர்மலா, நித்யா, நசீபா, மகேஸ்வரி ஆகியோர் வளைகாப்பு நடத்தி மகிழ்வித்தனர்.