Published : 16 Sep 2020 07:42 AM
Last Updated : 16 Sep 2020 07:42 AM

செலவினங்களை குறைத்தாலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்; கரோனா தடுப்பு, நிவாரணத்துக்கு ரூ.7,168 கோடி செலவு: பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தடுப்பு, நிவாரணங்களுக்காக ரூ.7,168 கோடி செலவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கரோனா தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புதீர்மானத்தின்போது, எதிர்க் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘கரோனாவுக்கு முந்தைய நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கிமுன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு என்னவானது என்பதை தெரிவிக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

கரோனா பரவலால் பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருந்தாலும் பொதுநல, மக்கள்நலத்திட்டங்களை அரசு குறைவின்றி செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் போது, மக்களின் நுகர்வில் குறைவு ஏற்படும்போது, அரசுதனது செலவினங்களை அதிகரித்து, மக்கள் பயனடையும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினால் மட்டுமே நுகர்வு அதிகரிக்கும். எனவே, தமிழக அரசு செலவுகளை கட்டுப்படுத்தி, கரோனா தடுப்புக்காக செலவிடப்பட்ட தொகைகளை துணை நிதிநிலை அறிக்கையில் சேர்த்துள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தலைப்புகளின் கீழ்,அந்த ஆண்டுக்கு குறைபாடு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டாலோ, எதிர்பாராத செலவினங்கள் செய்ய வேண்டியது வந்தாலோ, துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து சரிசெய்து கொள்ளலாம். அதன்படியே சட்டப்பேரவையில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே,நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கரோனா தொற்று நடவடிக்கையின்போது மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து கொள்முதலுக்காக ரூ.830 கோடியே 60 லட்சம், மருத்துவ கட்டுமானங்களுக்காக ரூ.147 கோடியே 10 லட்சம், கூடுதலாக நியமிக்கப்பட்ட சுகாதாரபணியாளர்களுக்கான சம்பளம்மற்றும் ஏற்கெனவே உள்ளவர்களுக்கான உணவு உள்ளிட்டவற்றுக்காக ரூ.243 கோடியே 50 லட்சம், கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பொதுவான செலவினம் ரூ.638 கோடியே 85 லட்சம்,மருத்துவமனை, தனிமைப்படுத்தலுக்காக ரூ.262 கோடியே 25 லட்சம், வெளிமாநில தொழிலாளர்களுக்கான நிவாரணப் பொருட்களுக்கு ரூ.143 கோடியே 62 லட்சம், பொது விநியோக திட்டத்துக்கான இலவச பொருட்கள், நலவாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்க ரூ.4,896 கோடி 2 லட்சம் என ரூ.7,167 கோடியே 97 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கும். இக்கட்டான சூழலில் செலவினங்களை மறுசீரமைப்பு செய்து வரவுக்கு ஏற்ப கட்டுப்படுத்துவது அவசியம். அரசின் மொத்த வருவாய் செலவினங்களில், 55 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம், வட்டிசெலவினங்களுக்கு செல்கிறது. 33 சதவீதம் சமூகத்தில் அடித்தட்டுமக்களுக்கான அவசியமான மானியங்கள், மின்துறை, போக்குவரத்து, கூட்டுறவு அமைப்புகளுக்கான நிதியுதவி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான பகிர்வு நிதி, மத்தியஅரசு திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. எனவே, செலவினங்களை கட்டுப்படுத்த ஒரு சில வாய்ப்புகளே உள்ளன.

அரசு பணியாளர்கள் ஓய்வூதியர்களுக்கு 3 அகவிலைப்படிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், ரூ.4,947 கோடியே 23 லட்சமும் ஈட்டிய விடுப்பு பணப்பயன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ. 2,448 கோடியே 82 லட்சமும் மீதமாகும். திட்டம் சாராத செலவினங்களை குறைத்தல், அகவிலைப்படி உயர்வுகளை தவிர்த்தல் உள்ளிட்ட செலவுகளை குறைத்துள்ளோம்.

மேலும், அரசு அலுவலங்களில் பயணப்படிகள் உள்ளிட்ட செலவு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்வரவினங்களின் போக்கு கண்காணிக்கப்பட்டு, செலவினங்களின் கணிப்பு மாற்றிக் கொள்ளப்படும். நலத்திட்டங்கள் மக்கள் நலனுக்காக எவ்வித மாற்றமும் இன்றி செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x