

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடவேளைகள் குறைப்பதை ரத்து செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தில் பாடவேளைகள் குறைப்பு ரத்து செய்யப்படுகின்றது. ஏற்கெனவே இருந்த நடைமுறையே தொடரும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. பாமகவின் கோரிக்கையை ஏற்று முடிவை மாற்றிக்கொண்ட சென்னை பல்கலைக்கு பாராட்டுகள்.
தமிழ் மொழி தாய்க்கு இணையானது. பல்கலைக்கழகங்கள் எத்தனை புதுமைகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தாயை எப்படிஒதுக்கி வைக்க முடியாதோ, அதேபோல், கல்வித்திட்டத்தில் தமிழ் மொழியை ஒதுக்கி வைக்கக் கூடாது; ஒதுக்கிவைக்க முடியாது என்பதை பல்கலைக்கழகங்கள் உணர வேண்டும்.
கல்லூரி மாணவர்களின் ஆங்கிலத் திறனை அதிகரிக்கும்பல்கலைக்கழகங்களின் முயற்சிவரவேற்கத்தக்கதுதான். அதற்கான கூடுதல் பாடவேளைகளை உருவாக்கி ஆங்கிலத் திறன்வகுப்புகளை பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.