Published : 16 Sep 2020 07:22 AM
Last Updated : 16 Sep 2020 07:22 AM

கரோனாவால் இறந்தவர் உடலை தகனம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை: சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்தது அரசு

சட்டப்பேரவையில் நேற்று பொது சுகாதார சட்டத்தில் 2 திருத்தங்கள் தொடர்பான முன்வடிவுகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

இதன்படி, கரோனா காரணமாக இறந்து போனவர்களைப் புதைத்தல், எரியூட்டல் செய்தலை பொதுமக்கள் தடுக்கும் சில நிகழ்வுகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. அத்தகைய செயல்கள் மனித சடலங்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்துவது ஆகும். அரசு அந்த செயல்களை தண்டனைக்குரிய குற்றமாக முடிவு செய்து, பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம், கரோனாவால் இறந்தவர் உடலை புதைப்பதை, எரியூட்டுவதை தடுக்கும், இடையூறு செய்யும் அல்லது முயற்சிக்கும் நபருக்கு அபராதத்துடன், ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை நீட்டிக்கும் சிறை தண்டனை வழங்கப்படும்.

மேலும், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமுடக்கம், சமூக இடைவெளி நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்தும் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் விதமாகசட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, அவ்விதமான வன்முறைகள் குற்றச்செயல்களாக கருதப்படும். இந்த வன்முறைகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன். மீறுவோர், உடந்தையாக இருப்பவர்களுக்கு 3 மாதங்களுக்கு குறையாமல், 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் சிறை தண்டனை வழங்கப்படும். ரூ.10 ஆயிரத்துக்கு குறையாமல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜிஎஸ்டி கணக்கு சமர்ப்பித்தல் குறித்த அறிவிப்பு வெளியிடுதல், அறிவிக்கைகள்,செயல்முறை ஆணைகளை நிறைவு செய்தல் உள்ளிட்டவற்றுக்கான கால நிர்ணயம் தொடர்பாக ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வடிவு தாக்கல்செய்து, நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x