Published : 29 May 2014 08:33 AM
Last Updated : 29 May 2014 08:33 AM

கோவை மேயர் ராஜினாமா பின்னணி என்ன?: இளைஞர் மீது கார் மோதியதா... கோவை தொகுதியில் வாக்கு குறைந்ததா... தொடரும் பரபரப்பு

கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமியிட மிருந்து அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை மேலிட உத்தரவின் பேரில் ஆணை யரிடம் செவ்வாய்க்கிழமை இரவு அவர் அளித்துள்ளார்.

அவரது கார் மோதி விபத்துக்கு உள்ளானதும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலும்தான் அவர் ராஜினாமாவுக்கான காரணங் களாக கூறப்படுகின்றன. இவர் மீது ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பலர் புகார் கூற போயஸ் கார்டனுக் குப் படையெடுத்ததும் குறிப்பிடத் தக்கது.

1980-ல் காடாம்பாடி கிராம அதிமுக கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங் கிய இவர், 1984-ல் கட்சித் தேர்தலில் வென்று சூலூர் ஒன்றியச் செயலாளர் ஆனவர். அதைத் தொடர்ந்து சூலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பொறுப்பேற்றார். எம்.ஜி.ஆர் அணி மாவட்ட இணைச் செயலா ளர் பொறுப்பையும் வகித்தவர்.

கோவை மாவட்ட ஜெ. பேரவை மாநகர் மாவட்டச் செயலாளராக 1991-ல் வந்தார். 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் பல்லடம் தொகுதிக்கு சீட் கேட்டு கிடைக்காத நிலையில் 1998-ல் ஜெ. பேரவையின் மாவட்டச் செயலாளர் ஆனார்.

2001-ல் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அப்போது அமைச்சராகி, வீட்டு வசதித்துறை, வணிகவரித் துறை, கூட்டுறவுத்துறை, தொழில்துறை, பிற்பட்டோர் நலத்துறை என பல்வேறு இலாகாக்களில் பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தார்.

2006-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதி கூட்டணிக் கட்சியான தேமுதிக-வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது இவர் மீதான அதிருப்தி காரணமாக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்பை இழக்க நேரிட்டது.

47 கவுன்சிலர்கள் புகார்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டபோது கோவை மாநகராட்சி மேயரானார். அப்போது, கோவை மாநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டது. இவர் மீது 47 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு முதல்வருக்கு புகார் அனுப்பினர் கள். 67 கவுன்சிலர்கள் போயஸ் கார்டனுக்கு சென்று புகார் அளித்தனர். அப்போது தலைமை யின் விசாரணையை சமாளித்தார்.

உள்ளூர் குழப்பங்கள்

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவும், கடைசி நேரத்தில் எதுவும் செய்யா விட்டால் இந்தத் தொகுதியை பறிகொடுக்க வேண்டி வரும் என்றும் உளவுப் பிரிவு போலீஸார் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து கோவை அதிமுக வேட்பாளர் நாகராஜனை அழைத்து தலைமை விசாரித் துள்ளது. அவரும் இங்கே நடக்கும் உள்ளூர் குழப்ப வேலைகளை விளக்கியிருக்கிறார். அதன்பிறகு வேலுச்சாமியை அழைத்து விசாரித்ததாம் கட்சித் தலைமை.

தேர்தல் செலவுகளை மாநகரச் செயலாளர் என்ற முறையில் வேலுச்சாமியிடம் கொடுக்காமல் சிங்காநல்லூர் எம்எல்ஏ சின்னச்சாமியிடம் தலைமை கொடுத்ததாம். ஓட்டு எண்ணிக்கை முடிவில் கோவை தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே அதிமுக வெல்ல முடிந்தது.

மேயர் குடி இருக்கும் சிங்கா நல்லூர் தொகுதியில் பாஜக சுமார் 6 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை வகித்தது. கோவை மாநகரப் பகுதிக்குள் வரும் மேலும் இரண்டு தொகுதிகளில் கோவை வடக்கில் 2,300 ஓட்டுக் கள் பின்னிலை. கோவை தெற்கில் பாஜக-வை விட வெறும் 1,500 ஓட்டுக்களே அதிகம். புறநகர் பகுதியில் அதிமுக-வுக்கு கணிச மான ஓட்டுக்கள் கிடைக்காமல் இருந்திருந்தால் கட்சி தோல்வி யைத் தழுவியிருக்கும்.

பதவியை பறித்த விபத்து

அதே நேரத்தில், கோவை பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விபத்து இவரது கட்சிப் பதவியை மட்டுமல்ல, மேயர் பதவியையும் ராஜினாமா செய்ய காரணமானதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கவுன்சிலர் கள் சிலர் நம்மிடம் பேசிய தாவது: ’’விபத்து நடந்த அன்று மாலையில் கோவை தனியார் மருத்துவமனைக்கு வேலுச்சாமி வந்திருந்தார். அங்கே சேர்க்கப் பட்டுள்ள அவருடை தாயைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அங்குள்ள டாக்டர்களிடம் பேசி விபத்தில் சிக்கிக்கொண்ட அந்தப் பையனை நன்றாக பார்த் துக்கொள்ளுங்கள். எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை என்று சொல்லிக்கொண்டு இருந் தார். அப்போதுகூட இவருடைய காரில் அடிபட்டவர்தான் அங்கே அட்மிட் ஆகியிருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஸ்ட்ராங்கா எழுதியதால்தான் இந்த நடவடிக்கை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இளைஞர் மீது மோதிய மேயரின் கார்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்க, கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை காலை பல்லடம் பகுதிக்குச் சென்றார்.இதைத்தொடர்ந்து, திருப்பூர் - பல்லடம் சாலை வெட்டுபட்டான்குட்டையில் இருந்து சாலையின் மறுபுறம் ஒருவழிச் சாலையில் சென்ற அவரது கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சந்திரசேகர் (31) படுகாயமடைந்தார். இருப்பினும் விபத்தை பொருட்படுத்தாமல் மேயரின் வாகனம் நிற்காமல் சென்றதாம்.இதையடுத்து அப்பகுதி மக்கள் இளைஞரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் விசாரித்ததில், சந்திரசேகர் (31) பல்லடத்தைச் சேர்ந்த பாலுசாமியின் மகன் என்பதும், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.சம்பவத்தை நேரில் பார்த்த உணவக ஊழியர் மணி அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் மோதிச்சென்றது கோவை மேயரின் வாகனம் எனத் தெரியவந்தது. இந்நிலையில் கோவையில் உள்ள பழுதுபார்க்கும் கடையிலிருந்து அந்த வாகனத்தை மீ்ட்டதாக, பல்லடம் போலீஸார் கூறினர். இதுதொடர்பாக கார் ஓட்டுநரான கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த கனகராஜை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்; காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வீட்டுப் பத்திரத்தை அடகுவைக்க அலைமோதிய வேட்பாளர்

மக்களவைத் தேர்தலில் கோவை மாநகராட்சி பகுதி-யில் அதிமுக-வின் வாக்குகள், பாஜக-வைக் காட்டிலும் குறைந்தது. ஊரக பகுதிகளின் வாக்குகள் மட்டுமே கைகொடுத்தது. சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாகராஜனை வெற்றி பெற வைத்தது.

இதற்கு முதல் தண்டனையாக தாமோதரனிடம் இருந்து வேளாண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது, வேலுச்சாமியிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளருக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அதைச் சமாளிக்க மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் வீட்டுப் பத்திரத்தைக் கொடுத்து ரூ.50 லட்சம் கேட்டுள்ளார். ஆனால் மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் கைவிரிக்க், பல கஷ்டங்களுக்கு நடுவே நாகராஜன் பணம் திரட்டி தேர்தலை சமாளித்ததாக கட்சியினர் கூறுகின்றனர். கோவையில் ஏன் வாக்குகள் குறைந்தது என்பது குறித்து உளவுப் பிரிவு போலீஸார் மூலம் விசாரணை நடத்திய தலைமைக் கழகம் மேற்கூறிய தகவல்களைத் தெரிந்துகொண்டதாகவும், இதற்கிடையே பல்லடம் அருகே தொழிலாளி மீது கார் மோதியதில் மனிதாபிமானம் இன்றி நிற்காமல் வந்ததாகவும், எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு அறிக்கையாக கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அதைத் தொடர்ந்தே பதவி பறிப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. செ.ம.வேலுசாமியின் பதவி பறிப்பைத் தொடர்ந்து கட்சியினரே இனிப்புகள் வழங்கி கொண்டாடியது மாற்றத்தை எதிர்பார்த்து பலர் இருந்ததாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x