Published : 15 Sep 2020 09:45 PM
Last Updated : 15 Sep 2020 09:45 PM

மத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டம் எதையும் எதிர்க்கத் திராணியற்ற ஆளும் கட்சி: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் விமர்சனம்

மத்திய அரசின் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, இந்தி மொழித் திணிப்பு, குடியுரிமைச் சட்டம் என எதையும் எதிர்க்கத் திராணியில்லாமல் இருக்கிறது ஆளும் கட்சி என முப்பெரும் விழாவில் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் விருதுகளை வழங்கிய பின்னர், திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“கடந்த 9-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் பேசும்போது, நான் குறிப்பிட்டுச் சொன்னேன். இன்னும் ஏழே மாதத்தில் நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். இது நான் அல்ல, நீங்கள் அல்ல. நாட்டில் இருக்கும் மக்களே தெளிவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் பொதுக்குழுவில் சொன்னேன்.

உடனே, ஊடகங்கள் பெரிய அளவில் விவாதங்கள் நடத்தின. இதைப் பெரிது பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். விமர்சனம் செய்தார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. விவாதம் நடத்துவதற்கு எதுவும் இல்லை. மக்கள் மனதில் இருப்பதைத்தான் நான் சொன்னேன். கரோனா வந்தபின் ஆட்சி என்று ஒன்று இங்கு இருக்கிறதா? கரோனாவை விடக் கோமா நிலையில் இன்றிருக்கும் அதிமுக ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.

கரோனா பற்றி சட்டப்பேரவையில் நான்தான் பேசினேன். நம்முடைய பொதுச் செயலாளர், துணைத்தலைவர் தெளிவாகப் பேசினார். கேலி செய்தார்கள். கிண்டல் செய்தார்கள். கொச்சைப்படுத்திப் பேசினார்கள். என்ன ஆனது?

எங்களுக்கு முகக்கவசம் கொடுங்கள் என்று அண்ணன் துரைமுருகன் கேட்டார். அதற்கு அவர்கள், 'உங்கெளுக்கெல்லாம் வயதாகிவிட்டது. அதனால் பயப்படுகிறீர்கள். பயப்படாதீர்கள். ஒரு உயிரைக் கூட சாக விடமாட்டோம்' என்றார்கள். ஆனால் இன்றைக்கு 8 ஆயிரம் பேர் இறந்து போய்விட்டார்கள்.

என்ன கொடுமை இது. ஒரு உயிர்கூட போகாது என்று சொன்னவர் முதல்வர். இன்று சட்டப்பேரவையில் கேட்டால் அது அரசின் கொள்கை என்று மாற்றிப் பேசுகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் 3 நாளில் கரோனா சரியாகிவிடும் என்றார்கள். 10 நாளில் முடிந்துவிடும், கடைசியாக கடவுள் பார்த்துக்கொள்வார் என்று சொல்கிறார்கள். இன்று 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள்.

இதுதான் கரோனாவை ஒழிக்கும் லட்சணமா? தமிழகத்தில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இதுதான் பரவாமல் தடுக்கும் அழகா? இது என்னுடைய புள்ளிவிவரம் இல்லை; அரசு தந்திருக்கும் புள்ளிவிவரம் . அதாவது உண்மையா? கிடையாது. இதிலும் பொய்க் கணக்கு. கொள்ளையடிப்பதிலும், கரோனா கணக்கு காண்பிப்பதிலும் பொய்க் கணக்கு.

இந்தக் கோட்டையில் அமர்ந்திருக்கும் கொடியவர்களை, கரோனாவை விடக் கொடிய ஊழல்களை செய்பவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டுமா வேண்டாமா? இதுதான் மக்களின் கேள்வி.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விட்டார்கள். அரியலூர் அனிதாவில் தொடங்கி, பெருவலூர் பிரதீபா, கூனிமேடு மோனிஷா, திருப்பூர் ரீதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிஸ்ரீதுர்கா, தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் இவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? தற்கொலை என்று கூட சொல்லமாட்டேன். கொலை நடந்துள்ளது.

இவர்களை மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளன. 13 பேர் கொலைக்கு யார் காரணம் என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு முழுக் காரணம்.

சட்டப்பேரவையில் அவர்கள் பேசினால் பதிவாகிறது. நாங்கள் குறுக்கிட்டுப் பேசினால், பதிவாகாது. சபைக் குறிப்பில் இருந்து எடுத்து விடுவார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் திமுகதான் நீட் பிரச்சினையைக் கொண்டு வருகிறது. தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு நிறைவேற்ற வேண்டும் என்று திமுகதான் கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு நீட்டில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்று முதன்முதலில் திமுகதான் குரல் எழுப்பி அதற்குப் பிறகு ஏற்றுக்கொண்டு, ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி 2 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பினோம்.

இந்திய குடியரசுத் தலைவருக்குத் தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.

சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுண்டா? இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிச்சல், தெளிவு உங்களிருக்கிறதா? மாநிலத்துக்கு வந்து சேர வேண்டிய நிதியைக் கூடப் பெறமுடியாமல் இந்த ஆட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள். குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்ததா உங்களுக்கு? முத்தலாக் சட்டத்தை எதிர்த்தீர்களா?

மத்திய அரசுக்கு அடிபணிந்து கூனிக் குறுகி இன்றைக்கு ஒரு அடிமை ஆட்சியை தலையாட்டி பொம்மையாக நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்களே தவிர இந்த அடிமை ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். அதைத்தான் இந்த முப்பெரும் விழாவில் நாமும் சபதம் எடுப்போம்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x