Published : 15 Sep 2020 06:53 PM
Last Updated : 15 Sep 2020 06:53 PM

ஆன்லைனில் சென்னைப் பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வு; தேதி, எப்படித் தேர்வு எழுதுவது?- விதிமுறைகள் வெளியீடு

சென்னை

சென்னைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு அறிவித்துள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விதிமுறைகளையும் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை நடத்தவேண்டும் என யுஜிசி வலியுறுத்தியதன் அடிப்படையில் செப்டம்பருக்குள் தேர்வுகளை முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து பல்கலைக்கழகங்கள் தேர்வுத் தேதிகளை அறிவித்து வருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகமும் தேர்வுத் தேதிகளை அறிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதால் அதற்கான விதிமுறைகளையும் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

விதிமுறைகள்:

* சென்னைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

* இளங்கலை, முதுகலை இறுதிப் பருவத் தேர்வினை எழுத உள்ள மாணவர்களும், ஏற்கெனவே இறுதிப் பருவத்தில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் மட்டுமே இந்தத் தேர்வினை எழுத முடியும்.

* மாணவர்களுக்கான தேர்வுகள் 90 நிமிடங்களுக்கு நடைபெறும். கடந்த பருவத் தேர்வுகள் அடிப்படையில் வினாத்தாள் இருக்கும்.

* மாணவர்கள் வினாத்தாள்களை அவர்களுக்குரிய இணையதளப் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள அதற்கான லிங்க அனுப்பப்படும். அதை மாணவர்களின் மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் அப் எண்களுக்கும் அனுப்பப்படும் அல்லது பல்கலைக்கழக இணையப் பக்கத்திலும் சென்று காணலாம்.

* காலை 9.30 மணி முதல் 11 30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 3.30 வரையும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் அவர்களுக்குரிய தனிப்பட்ட இணையதளப் பக்கத்தில் இருக்கும்.

* மாணவர்களுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரையும் நடைபெறும். தேர்வு நடைபெறுவதற்கு 30 நிமிடம் முன்னர் மாணவர்களுக்கு வினாத்தாள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும்.

* மாணவர்கள் A-4 தாளில் தேர்வினை 18 பக்கங்களுக்குக் குறையாமல் விடைத்தாளில் எழுத வேண்டும்.

* விடைத்தாளின் மேல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பக்கம் எண், பாடம், கையெழுத்து உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். இது ஒவ்வொரு பக்கத்திலும் எழுதப்படவேண்டும்.

* மாணவர்களின் சந்தேகங்களுக்காக ஒரு தொடர்பு அலுவலர் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்படுவார். மாணவர்கள் அவர்களுக்கான சந்தேகத்தை எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப் மூலம் கேட்டுத் தெளிவு பெறலாம்.

* மாணவர்கள் தேர்வுக்கு முன்னரே மாதிரித் தேர்வில் கலந்துகொண்டு முன் பயிற்சி பெறலாம். இந்த மாதிரித் தேர்வு பல்கலைக்கழகத்தால் 16/9 (நாளை) மற்றும் 18/9 (வெள்ளிக்கிழமை) தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

* கேள்வித்தாள்களைப் பதிவிறக்கம் செய்யவும், விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்யவும் வசதி இல்லாத மாணவர்கள் சம்பந்தப்பட்ட தொடர்பு அலுவலர்களை, முதல்வரை, தலைமைக் கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டால் அவர்கள் வேண்டிய வசதிகளைச் செய்து தருவார்கள்.

* மாணவர்கள் விடைகளை நீல நிறம் அல்லது கருப்பு நிற பேனாவால் எழுத வேண்டும். பாடநூல்களில் பக்கங்களை ஒட்டி அனுப்பக்கூடாது. டைப் செய்து அனுப்பக்கூடாது.

* எழுதிய பின்னர் மீண்டும் இணையதளத்தில் விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்யலாம். விடைத்தாள்களைச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

* பதிவேற்றம் செய்த பின்னர் சம்பந்தப்பட்ட தொடர்பு அலுவலருக்குப் பதிவேற்றம் செய்துவிட்டதாகத் தகவல் அனுப்ப வேண்டும். அவ்வாறு தகவல் அனுப்பாத மாணவர்களைத் தகவல் அலுவலர் உடனடியாகத் தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும்.

* இணையதளம் மூலம் அனுப்பும் வசதிகள் இல்லாதவர்கள் கல்லூரிகளுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x