திருச்சியில் பணப் பலன்களை வழங்கக் கோரி ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

சுந்தர் நகரில் உள்ள தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு, கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர். | படம்: ஜெ.ஞானசேகர்.
சுந்தர் நகரில் உள்ள தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு, கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர். | படம்: ஜெ.ஞானசேகர்.
Updated on
1 min read

திருச்சியில் தங்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்கக் கோரி, தனியார் தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு, கஞ்சித் தொட்டி திறந்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி செம்பட்டு பகுதியில் இயங்கி வந்த தனியார் தோல் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. ஆனால், இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய தொழிலாளர்கள் 55 பேருக்கு ஆலை நிர்வாகத்தினர் இதுவரை பணப் பலன்களை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிஐடியு சார்ந்த தமிழ்நாடு தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சுந்தர் நகர் பகுதியில் உள்ள ஆலையின் உரிமையாளர் வீட்டின் முன் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

இதன்படி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜெயபால் தலைமையில் இன்று (செப். 15) போராட்டம் நடைபெற்றது. ஆனால், ஆலை உரிமையாளரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், இது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக காவல் துறையினர் அளித்த உறுதியை ஏற்றுத் தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in