Published : 15 Sep 2020 06:12 PM
Last Updated : 15 Sep 2020 06:12 PM

கரோனா நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம்: பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கரோனா நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (செப். 14) தொடங்கியது. கரோனா தொற்று அச்சம் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று (செப். 15) சட்டப்பேரவை கூடியது.

இன்று, சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம்:

"கரோனா உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிற நோய்த்தொற்றாகும். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் வந்தது அல்ல. இந்த நோய்த்தொற்று வருவதற்கு முன்பு என்னென்ன எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அனைத்து முன்னெச்சரிக்கையையும் எடுத்த காரணத்தால் நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது. இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. குணடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுதான் நடைமுறை.

ஒரு உயிரைக்கூட இழக்கக்கூடாது என்பது அரசினுடைய நிலைப்பாடு. அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், இதற்கு முழுமையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். எல்லோரும் நோய்வாய்ப்பட்டுதான் வந்திருக்கிறோம். எல்லோருக்கும் ஏதோ ஒரு நோய் இருக்கத்தான் செய்கிறது. அவ்வப்போது வருகிறது, அதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுப்போம், பூரண குணமாகி விடுவோம்.

ஆனால், இந்த நோய்க்கு இன்னும் மருந்தே கிடையாது. அப்படியிருக்கின்ற நிலையில் கூட, அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, மருத்துவ நிபுணர்கள் சொன்ன ஆலோசனைகளின்படி, அரசு எடுத்த நடவடிக்கைகளால் இன்று தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த நோய் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது. அதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம்.

ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, நம் அனைவருடைய விருப்பமும் ஆகும். சட்டப்பேரவை உறுப்பினர்கூட இந்த நோய்த்தொற்றால் இறந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன் ஒரு பேட்டி கொடுக்கின்றார். அந்தப் பேட்டியில், ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், எனக்குக் கூட நோய்கள் இருக்கின்றன, என்னுடைய மருத்துவர், நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுரை அளித்துள்ளார். இருந்தாலும், நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினாலே பணி செய்ய வேண்டுமென்பதால், ஒரு மணி நேரம் தான் வெளியே செல்கின்றேன். அப்பொழுதுகூட, பாதுகாப்பாக இருக்கிறேன் என்று தெளிவுபடக் கூறினார்.

அப்படியிருந்தும் கூட, இந்த நோய்த்தொற்றால் தாக்கப்பட்டு இறந்தார் என்று சொன்னால், இந்த நோயினுடைய வீரியம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை அறிய வேண்டும்.

அனைவருக்கும் உயிர் முக்கியம். வாழ வேண்டுமென்றுதான் அனைவரும் பிறந்தோம். அதற்கு வேறுபாடே கிடையாது. எனவே, உயிரைக் காப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் அனைவருக்கும் தெரிவிக்கிறோம். எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டு வருகிறோம். நடிகர்களை வைத்து மக்களுக்கு எளிதாகப் புரியக்கூடிய வகையில், இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, இந்த நோய்ப் பரவலை எவ்வாறு தடுக்க முடியும் என்ற விவரங்களை அன்றாடம் ஊடகத்தின் மூலமாக தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்.

அது மட்டுமல்ல, உள்ளாட்சித் துறை, காவல் துறை இணைந்து எல்லாப் பகுதியிலும் ஒலிப்பெருக்கியின் மூலமாக இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா வீடுகளிலும் சுமார் 2 லட்சம் விளம்பரத் தாள் அடித்து, அந்த விளம்பரத் தாளில் என்னென்ன நோய் பரவுகிறது, நீரிழிவு நோய் என்றால் எப்படி, புற்றுநோய் என்றால் எப்படி போன்றவற்றை அச்சிட்டு, மருத்துவ நிபுணர்கள் மூலம் அறியப்பட்டு, இந்த நோய்க்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் வந்தால், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம்.

ஆகவே, அரசைப் பொறுத்தவரை, ஒரு உயிரைக் கூட இழக்கக்கூடாது என்பதற்காக முழுமையான விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஏற்படுத்தியிருக்கிறோம்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x