ராஜவாய்க்கால் நீர் உரிமை கோரி விவசாயிகள் சாலை மறியல்: மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ராஜவாய்க்கால் நீர் உரிமை கோரி விவசாயிகள் சாலை மறியல்: மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
Updated on
1 min read

ராஜவாய்க்கால் நீரை குடகனாற்றில் திறந்துவிட்டதைக் கண்டித்து சித்தையன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இன்று திண்டுக்கல் - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் பெய்யும் தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள குளங்களுக்கு சென்று பாசன விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு பயன்படுவதை தடுத்து, குடகனாற்றில் திறந்துவிடப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் நேற்று திண்டுக்கல்-தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜவாய்க்கால் நீரை குடகனாற்றில் திறந்துவிடப்படுவதால், சித்தையன்கோட்டை பகுதியில் உள்ள 14 கண்மாய்கள் நிரப்பாமல் 60 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு சிக்கல் ஏற்படும். மேலும் விவசாயத்திற்கு தேவையான நீர்ஆதாரங்கள் பாதிக்கும் என மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் உரிமை இல்லாதபகுதிக்கு மாவட்டநிர்வாகம் தண்ணீர் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கானோர் சாலைமறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையறிந்த திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா, ஆத்தூர் வட்டாட்சியர் பவித்ரா, டி.எஸ்.பி., அசோகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் என முடிவு செய்யப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் திண்டுக்கல்-தேனி சாலையில் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in