

கடந்த 50 ஆண்டாக வைகை ஆற்றங்கரையில் கலக்கும் சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்க வடகரையில் உள்ள 15 வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.291 கோடியில் 308 கி.மீ., க்கு பாதாள சாக்கடை திட்டம்(Underground Drainage) அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளது.
வைகை ஆற்றின் வடகரை பகுதியில் பாதாள சாக்கடை வசதியில்லாததால் வீடுகள், தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடந்த 50 ஆண்டாக நேரடியாக ஆற்றில் கலக்கிறது.
அதனால், ஆற்றில் நிரந்தரமாகக் கழிவு நீர் தேங்கி அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்றுகள் பரவியது.
துர்நாற்ம் வீசியதால் அப்பகுதி வழியாக மக்கள் செல்ல முடியவில்லை. அதனால், நிரந்தரமாக ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கரோனா தொடங்குவதற்கு முன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.291 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் (UGD) உருவாக்கப்பட்டது.
அதற்குள் கரோனா ஊரடங்கு தொடங்கியதால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமுல்படுத்தப்பட்டதால் கடந்த 2 மாதத்திற்கு முன்பே மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கி நடக்கிறது.
தற்போது இந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்குவதற்கான ஆய்வுப்பணிகளை வைகை வடகரை பகுதி சாலைகள், தெருக்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இந்த பாதாளசாக்கடை திட்டம் நிறைவடைந்ததும், இந்த பாதாளசாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படும். வைகை ஆற்றங்கரையில் பாதாள சாக்கடை வசதியில்லாத பகுதிகளில் சாக்கடை நீர் கலக்க வாய்ப்பே இல்லை. வண்டியூர், ஆணையூர், விளாங்குடி,
சாந்தி நகர், கூடல் நகர், எஸ்.அலுங்குளம், விசாலாட்சி நகர், திருப்பாலை, கண்ணநேந்தல், பரசுராம்பட்டி, உத்தங்குடி, மஸ்தான்பட்டி, மேலமடை, தாசில்தார் நகர், வந்தியூர், ஆதிகுளம் மற்றும் நாகன்குளம் போன்ற குடியிருப்பு பகுதிகள் இந்த திட்டத்தில் பயன்பெறும். இப்பகுதியில் உள்ள 45 ஆயிரம் வீடுகளுக்கு இந்த பாதாளசாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் வண்டியூர், ஆணையூர், விளாங்குடி பகுதியில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைய உள்ளது. தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய்கள் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் பணிகள் நடக்கிறது.
மற்றொரு புறம் பாதாள சாக்கடை அமையும் சாலைகள், தெருக்களில் குழி தோண்டுவதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கிறது.
முதலில் கட்டுமானத்திற்கு தேவையானப்பொருட்களை சம்பந்தப்பட்ட தெருக்கள், சாலைகளில் கொண்டு வந்துப்போட்டப்பிறகுதான் கட்டுமானப்பணிகளை தொடங்க உள்ளோம். அப்போதுதான் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.