Published : 15 Sep 2020 05:29 PM
Last Updated : 15 Sep 2020 05:29 PM

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கின்றன: உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிக்கின்றன என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டு என்கிற பெயரில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி வலைவிரிக்கும் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் நடிப்பதும் அது அதிகமாகப் பகிரப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என ஆடும் இளைஞர்கள் இதில் எளிதாகப் பணத்தை இழக்கிறார்கள். தங்கள் விருப்பமான கிரிக்கெட் பிளேயரே, நடிகரே விளையாட அழைப்பதால் இப்படி நிகழ்கிறது.

சமூக அக்கறையில்லாமல் பணத்துக்காகப் பிரபலங்கள் இவ்வாறு நடிப்பதால் இளைஞர் சமுதாயம் கடும் பாதிப்படைகிறது. தற்கொலைகளும் நிகழ்கின்றன. இதைத் தடுக்கக் கோரியும் நடிக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரியும், அதன் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரைக் கைது செய்யக்கோரியும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக்கோரி வழக்கறிஞர் வினோத் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளில் மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின்படி, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது. இணையதளச் சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிக்கின்றன என்று தெரிவித்தனர்.

மேலும், பெற்றோர் உறங்கச் சென்ற பிறகு ஆன்லைனில் விளையாடத் தொடங்கும் பிள்ளைகள், அதிகாலை வரை விளையாடுகின்றனர், இந்த விளையாட்டுகளுக்குக் குழந்தைகளும் அடிமையாகின்றனர் என வேதனையுடன் குறிப்பிட்டனர்.

மனுதாரர் சூரியபிரகாசம், “ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், இந்த வழக்கில் விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இருவரையும வழக்கில் சேர்க்க மறுத்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், வழக்குக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x