

"நம்முடைய குப்பைகளுக்கு நாமே பொறுப்பு" என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் உள்ள ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தில் ஸ்வட்ச் பாரத் அபியான் மற்றும் வேஸ்ட் கார்ட் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 200 குடும்பங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் விசாகன் இன்று கம்போஸ்ட் பின் வாளிகளை வழங்கினார். அவர் பேசியதாவது:
நம்முடைய குப்பைகளுக்கு நாமே பொறுப்பு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பாக குப்பைகளை யாரும் வாங்குவது கிடையாது.
ஓவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை எப்படி உரமாகக் கையாள்வது என்பது பற்றி தெரிந்து உரமாக தயாரித்து பயன்படுத்தி வந்தனர். தற்போது காலத்திற்குகேற்ப இந்த முறை மாற்றப்பட்டு மறுபடியும் பழைய முறைப்படியே நாம் குப்பைகளை கையாள்கிறோம்.
தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்திற்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் பணிகளுக்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை.
மாநகராட்சியும் மக்களும் இணைந்து பணியாற்றினால்தான் மதிப்பீடு வழங்கப்படும். மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 லட்சம் வீடுகளில் குறைந்தது 10 சதவீதம் அதாவது 40 ஆயிரம் வீடுகளில் குப்பைகளை முறையாக கையாண்டால் தான் நமது மாநகருக்கு மதிப்பீடு அதிகமாக கிடைக்கும்.
இந்தூர் நகரத்தில் குப்பைகளை அதிகமாக பொதுமக்கள் முறையாக கையாளுவதால் முதல் மதிப்பெண் பெற்றுள்ளது. எனவே நாமும் அதுபோன்று குப்பைகளை இணைந்து கையாள வேண்டும். வீடுகளில் சேரும் காய்கறி மற்றும் உணவு கழிவுகளை தற்போது வழங்கப்படும் வாளியில் சேகரித்து உரமாக தயாரிக்க வேண்டும்.
இந்த முறையினை ஆரம்பம் என்பதோடு விட்டு விடாமல் தொடர்ந்து குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் முறையினை அனைவரும் கையாண்டு நமது மாநகருக்கு அதிகமாக மதிப்பீடுகளை பெற்று தர வேண்டும். வீட்டு குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் முறையினை சிறந்த முறையில் செயல்படுத்தி மதுரை மாநகராட்சியில் முன்மாதிரியான குடியிருப்பாக திகழ வேண்டும்
வீடுகளில் சேரும் காய்கறி கழிவுகள், பழ கழிவுகள், இலைகள், பூக்கள், உணவுக்கழிவுகள் ஆகிய கழிவுகளை கம்போஸ்ட் பின் வாளியில் சேகரித்து தென்னம் பொட்டு கலவையை தேவையான அளவு தூவி கிளறி பூஞ்சை காளான் பவுடரை சிறதளவு தெளித்து வாளியை மூடி வைக்க வேண்டும். 15 நாட்களுக்கு பிறகு உரத்தினை தங்களது வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசிானர்.
உதவி நகர்நல அலுவலர் வினோத் ராஜா, ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத் செயலாளர் மலைச்சாமி, தலைவர் ஆசைத்தம்பி, பொருளாளர் கிருஷ்ணதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திர வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.