

புளியந்தோப்பில் மாநகராட்சி தெருவிளக்கு மின்சாரக் கசிவினால், சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கிப் பலியான விவகாரத்தில், தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை திருவிக நகர் மண்டலத்துக்குட்பட்ட வார்டு 73-ல் உள்ள புளியந்தோப்பு நாராயண சாமி தெருவில் மழைநீர் தேங்கி இருந்தது. இந்நிலையில், பெரியார் நகர் குடிசைமாற்று வாரியக்குடிருப்பில் வசித்து வந்த அலிமா (45) என்ற பெண்மணி, சாலையோரம் நடந்து சென்றபோது தெருவிளக்கு கேபிளில் கசிந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த பத்து நாட்களாக மின்சாரக் கசிவு குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் இது தங்கள் வேலையல்ல என மின் வாரியமும், தெருவிளக்கு பராமரிக்கும் மாநகராட்சியினரும் அலைக்கழித்ததாக தெருவாசிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட மின் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகை செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு (SUO-MOTU) செய்துள்ளது.
வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையப் பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர், மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.