

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துடன் கடையர் சமூகத்தை இணைக்கக்கூடாது என உத்தரவிடக்கோரிய வழக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், பிற பகுதிகளிலும் கடையர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக கடையர் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இணைக்க வேண்டும் என சில அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக பரிசீலிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து கடந்த ஆண்டு மார்ச் 4-ல் அரசாணை பிறப்பித்தது.
கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்து வரும் மக்களை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் சேர்க்கக் கூடாது. தமிழகத்தில் கடையர் சமூகம் மிகவும் தொன்மையான, பழம்பெருமை வாய்ந்த மூத்தகுடி. இதை வரலாற்று அறிஞர்கள் பலர் ஒத்துக்கொண்டுள்ளனர். இதற்கு பல சான்றுகளும் உள்ளன.
கடையர் சமூக மக்களை தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் சேர்த்தால், கடையர் சமூகத்தின் தொன்மைக்கு பாதிப்பு ஏற்படும். கடலோர மாவட்டங்களில் வாழும் கடையர், கட்டசார், பட்டங்கட்டியார் ஆகிய சமூகங்களை ஒன்றிணைத்து ‘பட்டங்கட்டியார்’ என்ற பொதுப் பெயர் சூட்டவும், கடையர் சமூகத்தை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தோடு இணைக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.