நீட் தேர்வைக் கொண்டுவர திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது; வரலாற்றுப் பிழையை ஏற்படுத்தியுள்ளீர்கள்: பேரவையில் முதல்வர் பழனிசாமி சாடல்

சட்டப்பேரவையில் பேசும் முதல்வர் பழனிசாமி.
சட்டப்பேரவையில் பேசும் முதல்வர் பழனிசாமி.
Updated on
1 min read

நீட் தேர்வைக் கொண்டு வர திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது என, முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (செப். 15) தொடங்கியது. அவை தொடங்கியதும் நேரமில்லா நேரத்தின்போது நீட் மாணவர்கள் தற்கொலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, நீட் தேர்வு அச்சம் காரணமாக, மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்து மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைக் கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

பின்னர் அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேசினார். அவர் பேசும்போது, "நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார் எனக் குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியால்தான் நீட் வந்தது" எனப் பேசினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சபையில் இல்லாத ஒருவர் பற்றிப் பேசுவது தவறு என்று கூறி அவரது பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தினர்.

ஆனால், சபாநாயகர் நீக்க மறுத்துவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடுவில் வந்து கோஷமிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களைக் கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து நீட் தேர்வு குறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "யாருடைய ஆட்சியில் நீட் வந்தது? நீட் தேர்வு எப்போது வந்தது? நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று இந்த நாட்டுக்கே தெரியும், யாருக்கும் தெரியாதது கிடையாது.

2010-ம் ஆண்டு ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பைப் பெற்றது அதிமுக, மறுக்க முடியுமா? அப்போது அந்தத் தீர்ப்பை எதிர்த்து யார் வாதாடினார்கள்? இன்றைக்கு வெளிநடப்புச் செய்திருக்கிறீர்களே, இத்தனை பேர் வாதாடுவதற்குக் காரணம் என்ன? காரணகர்த்தா யார்? இவ்வளவு பேருக்குப் பிரச்சினை வந்ததற்கு யார் காரணம்? நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வருவதற்கு யார் காரணம்? நாங்கள் அல்ல.

நீங்கள் (திமுக) கூட்டணியில் வைத்திருக்கிறீர்களே, இப்போது வெளிநடப்புச் செய்தார்களே, அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி, வெளியில் வந்து முற்றுப்புள்ளி வைத்தேன் என்று சொன்னார்கள். நீங்கள் கூட்டணியில் இடம்பெற்று 2010-ம் ஆண்டில் நீட் தேர்வைக் கொண்டு வந்ததுதான் 13 பேர் மரணத்திற்குக் காரணம். திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in