Published : 10 Sep 2015 05:16 PM
Last Updated : 10 Sep 2015 05:16 PM

ஆட்டோவில் அதிக கட்டணம்: புகாருக்கு புதிய ஹெல்ப்லைனை அறிவித்தது தமிழக அரசு

ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் அளிக்கும் வகையில் புதியதாக கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 18004255430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது. பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழக அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது.

ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்டோ இதுவரை வழங்கப்படவில்லை. பின்னர், இதே ஆட்டோ கட்டண முறை தமிழகம் முழுவதும் படிப்படியாக அமலாக்கப்பட்டது.

எரிபொருட்கள், உதிரி பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய தொடங்கியுள்ளனர். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60 வசூலிக்கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக நுகர்வோர் அமைப்புகளும், பொதுமக்களும் தமிழக அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆட்டோ கட்டணம் குறித்து புகார் அளிக்கும் வகையில் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x