Last Updated : 15 Sep, 2020 02:23 PM

 

Published : 15 Sep 2020 02:23 PM
Last Updated : 15 Sep 2020 02:23 PM

காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குரிய அரிசி, பணம் வழங்கும் திட்டம்: அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் மதிய உணவுக்குரிய அரிசி மற்றும் மளிகைப் பொருட்களுக்குரிய தொகை ஆகியவற்றை மாணவர்களிடமே நேரடியாக வழங்கும் திட்டத்தை புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் இன்று (செப்.15) தொடங்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பணத்தை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரி கல்வித்துறை சார்பில், மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மதிய உணவுக்குரிய அரிசியும், காய்கறி, மளிகைப் பொருட்களுக்கான தொகையும் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கம் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வழங்கப்படுவது முதலாவதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 175 மாணவர்களுக்கு இவ்வாறு இன்று தொடங்கி 3 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தம் 173 டன் அரிசியும், சுமார் ரூ.1 கோடியே 43 லட்சம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 99 அரசுப் பள்ளிகளில் 9,200 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

கரோனா பேரிடர் காலத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு இது உதவியாக இருக்கும். இத்தொகையைப் பயன்படுத்திப் பிள்ளைகளுக்கு முட்டை, சத்தான காய்கறிகள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்" என அமைச்சர் கமலக்கண்ணன் கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், நல்லெழுந்தூர், சேத்தூர், பண்டாரவடை, முப்பெய்த்தங்குடி, நல்லம்பல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளிலும் அமைச்சர் கலந்துகொண்டு இப்பணியைத் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x