Last Updated : 15 Sep, 2020 01:32 PM

 

Published : 15 Sep 2020 01:32 PM
Last Updated : 15 Sep 2020 01:32 PM

தந்தை, மகன் இறப்பு வழக்கில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவருக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை

தந்தை, மகன் இறப்பு வழக்கில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கலான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தந்தை, மகன் கொலை தொடர்பாக சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜிவ்காந்தி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஜூன் மாதம் 19-ந்தேதி இரவில் கைது செய்யப்பட்டு மறுநாள் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் நேரில் பார்க்காமல் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

இருவரையும் நீதித்துறை நடுவர் நேரில் பார்த்திருந்தால் அவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டு உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தது தெரிந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டிருந்திருந்தால், இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பர்.

எனவே இருவரையும் நேரில் பார்க்காமலேயே சிறையில் அடைக்க உத்தரவிட்ட சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய மனுவுக்கு இதுவரை பதில் வரவில்லை. எனவே நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர், அரசுப்பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுதாரர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x