

நீட் தேர்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் அதிமுக உறுப்பினர், திமுக-காங்கிரஸ் கூட்டணிக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக உறுப்பினர் பேச்சு சபைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடக்கிறது. இன்றைய நேரமில்லா நேரத்தில் திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது அதிமுக உறுப்பினர் இன்பதுரை பேச்சால், அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழப்பு சம்பந்தமான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். பின்னர் பேசிய அதிமுக உறுப்பினர் இன்பதுரை, திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தன எனக் குற்றம் சாட்டினார்.
அப்போது அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணிக் குறித்துப் பேசிய பேச்சால் அமளி ஏற்பட்டது. அதைக் கண்டித்து அவையின் மையத்துக்கு வந்து திமுக -காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர் இன்பதுரை திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசியது சபைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன.