

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்களில் கருப்புத்துணி கட்டிக் கொண்டும், ஸ்டெத்தஸ்கோப்பை கழுத்தைச் சுற்றி கயிறு போல் கட்டியபடியும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சமயன், இந்திய வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி தொடக்க உரையாற்றினார். இந்திய வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபாரதி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசு நீட் தேர்வை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ வாபஸ் பெறுவதுடன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும்.
மேலும், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்ற மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டிய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப்பட்டியலில் இணைத்திட கோரியும், புதிய கல்விக் கொள்கையை கைவிட கோரியும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.