

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் ஆக்ஸிஜன் சப்ளை பாதிப்பால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியதால் சர்ச்சை எழுந்தது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (42), திருவண் ணாமலை மாவட்டம் களம்பூரைச் சேர்ந்த முருகன் ஆகியோர் நேற்று மாலை உயிரிழந்தனர். இருவருக்கும் வென்டிலேட்டர் மூலமாக ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு ஏற்பட்டதால் அடுத் தடுத்து உயிரிழந்ததாக உறவினர் கள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதே நேரத்தில், மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பிரிவு கட்டிடத்தில் பணியாற்றிய 5 பேர் திடீரென மயக்கமடைந்தனர். அவர்கள், அவசர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கூறும்போது, ‘‘கலைச்செல்வி கடந்த 7 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 12-ம் தேதி கரோனா சிகிச்சையில் குணமடைந்தார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பிரச்சினையால் அவர் உயிரிழந்தார்.
அடுத்ததாக, முருகன் (36) என்பவர் நுரையீரல் பிரச்சினையால் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகும் நுரையீரல் பிரச்சினைக்காக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை. வென்டிலேட்டர் சிகிச்சை பெறும் வார்டில் 16 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.
ஆக்ஸிஜன் சப்ளை குறை பாட்டில் யாரும் உயிரிழக்க வில்லை. தொடர்ச்சியான உடல் நலக்குறைவால் மட்டுமே உயிரிழந் துள்ளனர்’’ என்றார்.