

கொடைக்கானல் செல்ல இ-பாஸ் வழங்குவதில் குளறுபடிகள் நடப்பதால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் மற்றும் வெளிமாவட்டத்தினர் அவதிக்குள்ளாகின்றனர்.
அரசுப் பேருந்தில் செல்லும் வெளிமாவட்டத்தினர் எந்த வாகன எண்ணை குறிப்பிட்டு இ-பாஸ் விண்ணப்பிப்பது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் செல்ல வெளி மாவட்டத்தினருக்கு இ-பாஸ் அவசியம் என தமிழக அரசு அறிவித்தது.
இதில், திண்டுக்கல் மாவட்ட மக்கள் கொடைக்கானல் செல்ல வேண்டுமானால் அவர்களது ஆதார் அடையாள அட்டை அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் நேற்றுமுதல் திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவது அவசியம் என கொடைக்கானல் வருவாய்த்துறையில் அறிவிக்கப்படாத உத்தரவை செயல்படுத்திவருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்பேரில் அடையாள அட்டை காண்பித்தால் போதும் என்று கொடைக்கானல் செல்லும் திண்டுக்கல் மாவட்டத்தினரும் தடுத்துநிறுத்தப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை நம்பி சொந்த வேலையாக கொடைக்கானல் செல்பவர்களும் இ பாஸ் இல்லை என டோல்கேட்டில் தடுத்துநிறுத்தப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு மாறாக தாலுகா நிர்வாகம் புதிய விதியை கடைப்பிடிப்பது ஏன் என தெரியவில்லை. இது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் பஸ்களில் வரும் வெளிமாவட்டத்தினர் இ பாஸ் விண்ணப்பிப்பதில் சிக்கல் உள்ளது. காரணம், இ பாஸ் விண்ணப்பிக்கும்போது, வாகன பதிவு எண், எந்த வகையான வாகனம் என கேட்கப்படுகிறது. இதனால் பேருந்தில் கொடைக்கானல் செல்லும் வெளிமாவட்டத்தினரால் இ பாஸ் விண்ணப்பிக்க முடிவதில்லை.
இவர்களுக்கு விண்ணப்பிக்க வழிதெரியாதநிலையில் அரசு பேருந்தில் வரும் வெளிமாவட்டத்தினரை டோல்கேட்டில் இறக்கிவிடும் நிகழ்வு தினமும் நடக்கிறது. பாதிவழியில் பேருந்தில் இறங்கிவிடப்படும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அடுத்தடுத்து குளறுபடிகளால் வேலை நிமித்தமாக கொடைக்கானல் செல்லும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் பலர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மேலும் மதுரை, தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் கொடைக்கானலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் வரும் வெளிமாவட்ட பயணிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அரசுப் பேருந்துகளில் வருபவர்கள் இ பாஸ் விண்ணப்பிக்கும் முறையையும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தவேண்டும், மக்கள் அவதிக்குள்ளாவதை தடுக்க குளறுபடிகளை கலைய திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கொடைக்கானலை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தின் பிறபகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் இ பாஸ் தேவை என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதால் தான் நாங்கள் இ பாஸ் கேட்கவேண்டியதுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து பேருந்தில் வருபவர்கள் அவர்களது இருசக்கரவாகன எண்ணை பதிவு செய்தாவது இ பாஸ் பெறவேண்டும். முடிந்தவரை சுற்றுலாபயணிகள் அதிகம் வருவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகிறது, என்றார்.