மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் ஜான்மோசஸ் கரோனாவால் மரணம்

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் ஜான்மோசஸ் கரோனாவால் மரணம்

Published on

தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் க.ஜான்மோசஸ் இன்று (செப்.15) காலையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

மதுரை சேதுபதி பள்ளி வளாகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பாரதியார் பிறந்த நாள் விழாவில் கடைசியாகப் பங்கேற்றார். அதன் பிறகு உடல்நலக் குறைவால் மதுரை அரசு பொது மருத்துவமனையில் ஜான்மோசஸ் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் மரணமடைந்தார்.

மதுரை கரிமேடு அந்தோணியார் கோயில் தெருவில், சுதந்திர தினத்தன்று (15.8.1947) பிறந்த அவர் ஆரம்பக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில், குறிப்பாகக் காமராஜரின் தொண்டராக இருந்தார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாகவும் இருந்தவர். பிறகு காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றினார். பிற்காலத்தில் அது ஜனதா கட்சியாகவும், ஜனதா தளமாகவும் மாறியபோது அந்தப் பாதையிலேயே பயணித்தார். மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகச் சுமார் 15 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி வந்தார். மிகச்சிறந்த பேச்சாளர். நடிகர் சிவாஜி மீது அளப்பரிய அன்பு கொண்டவர். இலக்கியக் கூட்டங்களிலும் முழங்கியவர்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் எம்.பி., எம்எல்ஏக்களை எல்லாம் கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், கடுகாய்க் கரைந்து போனாலும் கூட, தனது தொடர் செயல்பாட்டின் மூலம் அப்படியொரு கட்சி தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் இயங்கிக் கொண்டிருப்பதாக அடையாளம் காட்டியவர். கிழக்கு பெருமாள் தெப்பக்குளம் சரஸ்வதி பவன் லாட்ஜில், அறை எண் 9-ல் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு, கட்சி நடத்திக் கொண்டிருந்தார். பத்திரிகைகளுக்கு வாழ்த்துச் செய்திகள், கண்டன அறிக்கைகளை அனுப்புவதோடு நில்லாமல் தினமும் குறைந்தது நான்கு பொது நிகழ்ச்சிகளிலாவது கலந்துகொள்பவர்.

இந்நிலையில், கரோனா தொற்றுக்காகச் சிகிச்சையில் இருந்த ஜான்மோசஸ் இன்று காலையில் மரணமடைந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in