

ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா ஊரடங்கில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை கடந்த 1-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகள் இ-பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இ-பாஸ் பெற்று வருவோரை ஏற்காட்டுக்கு செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். ஆனால், பயணிகள் பலர் இ-பாஸ் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் தினமும் ஏற்காட்டுக்கு வருகின்றனர். அவர்களை சோதனைச் சாவடியில் போலீஸார் தடுத்து எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே, விடுமுறை நாட்களில்தான் பயணிகள் வருகை ஏற்காட்டில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார நாட்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள் சிலர் கூறியதாவது:
இ-பாஸ் தேவை என அறிவிக்கப்பட்டுள்ள ஏற்காட்டில் பூங்காக்கள் திறக்கப்பட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இ-பாஸ் நடைமுறையை நீக்கி ஏற்காடு வருவோருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தி அனுமதிக்க வேண்டும்.
கரோனா ஊரடங்கினால், 5 மாதங்களாக வீடுகளில் முடங்கி இருந்ததால், பலரும் மன அழுத்தத்தில் உள்ளனர். எனவே, சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் இன்றி செல்ல அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.