

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்வது கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனைகள். இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் கேரள மாநில எல்லையில் உள்ள பெரும்பாலான மக்கள், கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பந்தலூர் பகுதிகளில் அடிக்கடிகாட்டு யானை மற்றும் பிற விலங்கு கள் தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள், முதலுதவிக்குகூட 30 கி.மீ. தூரமுள்ள கூடலூர் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டியநிலை உள்ளது. பயண தூரத்தால், உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்துள்ளனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மேற்கூரையால், மழைக் காலங்களில் உள்நோயாளிகள் மழையில் நனைந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
பிரசவ வார்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், கட்டில் மற்றும் தரை முழுவதும் நனைவதோடு, வார்டு முழுவதும் குளம்போல காட்சியளிக்கிறது.
கூரையில் ஒழுகும் மழைநீரை பாத்திரங்களில் சேகரித்து வெளியில் கொட்டவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கூடலூர் நுகர்வோர் பாது காப்புமையசெயலாளர் சிவசுப்பிரமணியம் கூறும்போது, ‘‘இந்த மருத்துவமனை யில் போதுமான மருத்துவர்கள் இல்லை.டிஜிட்டல் எக்ஸ்ரே கிடையாது. மழைநீர்ஒழுகுவதால் கூரையை சீரமைக்க பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். எந்த பயனும் இல்லை’’ என்றார்.
மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி கூறும்போது, ‘‘மழை அதிகமாக பெய்ததால், கூரையில் ஒழுகுகிறது. உடனே கூரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.