Last Updated : 15 Sep, 2020 10:47 AM

 

Published : 15 Sep 2020 10:47 AM
Last Updated : 15 Sep 2020 10:47 AM

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளின் பாதுகாப்புப் பணியில் 243 காவலர்கள்: மத்திய உள்துறையில் புகார்

புதுச்சேரி சட்டப்பேரவை: பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

மக்கள் பாதுகாப்புக்குப் போதிய காவலர்கள் இல்லாத சூழலில் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 243 ஐஆர்பிஎன், பிஏபி, ஹோம் கார்டு காவலர்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சருக்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி நேற்று (செப். 15) அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

"மிகச்சிறிய பரப்பளவு கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிக்கு அதிக எண்ணிக்கையில் காவலர்கள் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முதல்வரின் மகள் ஆகியோருக்கு ஐஆர்பிஎன் காவலர்கள் 185 பேர், பிஏபி காவலர்கள் 37 பேர், ஊர்க்காவல் படையினர் 21 பேர் என மொத்த 243 பேர் பாதுகாப்புப் பணியில் உள்ளதாக தகவல் அளித்துள்ளது.

குறிப்பாக, ஐஆர்பிஎன் காவலர்கள் 185 பேரில் 55 பேர் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கட்சியினரிடம் பணிபுரிகின்றனர். ராஜ்நிவாஸில் 48 பேர் பணியில் உள்ளனர். மீதமுள்ள 82 பேர் அதிகாரிகள், அலுவலகங்களில் பாதுகாப்புப் பணிகளில் உள்ளனர்.

புதுச்சேரி காவல்துறையில் 7-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள், 33 எஸ்.பி.க்கள் இருப்பினும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட போதுமான காவலர்கள் இல்லாததால் தினசரி கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களும், சிறுசிறு குற்ற சம்பவங்களும் மிக அதிகமாகி வருகின்றன.

இந்நிலையில், சமூக நலத்துறை அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு ஏற்கெனவே சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ள நிலையில், அவரின் இல்ல பாதுகாப்புக்கு 8 காவலர்களும், இதேபோல் வருவாய் அமைச்சருக்கு 3 காவலர்களும் என இரு அமைச்சர்களின் இல்லங்களுக்கு மட்டும் இத்தனை காவலர்கள் எதற்கு?

குறிப்பாக, முதல்வரின் மகள் இல்லத்திற்கு 3 பேர், தலைமைச் செயலாளர் இல்லத்திற்கு 6 பேர், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 7 பேர் எனவும், புதுவையில் உள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இருவருக்குத் தலா 2 பேர் என மொத்தம் 20 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இந்த காவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மூலம் ஆண்டுக்கு அரசு நிதி கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. மேலும், சிறிய பரப்பளவு கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளோருக்கு 243 பேர் பாதுகாப்பு என்பது மிக அதிகப்படியானதாகும்.

எனவே, தேவையின்றி கூடுதலாக உள்ள காவலர்களை திரும்ப பெற வேண்டும் எனவும், இவர்களை சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்"

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x