புதுக்கோட்டை: முதல்வர் பேனரால் தப்பியது கலாம் சிலை?

புதுக்கோட்டை: முதல்வர் பேனரால் தப்பியது கலாம் சிலை?
Updated on
1 min read

புதுக்கோட்டையில் பெரியார் நகரில் உள்ள நகராட்சி பூங்கா அருகே சாலையோரமாக சுமார் 7 அடி உயர பீடத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

அரசின் அனுமதி பெற்ற பின்னரே தலைவர்களின் உருவச் சிலையை அமைக்க வேண்டும் என அரசின் விதிமுறைகள் உள்ள நிலையில், இவ்வாறு அனுமதியின்றி கலாமுக்கு சிலை வைத்தது குறித்து காவல், நகராட்சி, வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், அந்த சிலையை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

மேலும், சிலை அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் பரவியதால், அச்சம் அடைந்த சிலை அமைக்க ஏற்பாடு செய்தவர்கள் அதற்கு பொறுப்பேற்க மறுத்துவிட்டனர்.

எனினும், சிலையை அகற்றினால் போராட்டத்தில் ஈடுபட அப்பகுதியினருடன் பல்வேறு சேவை அமைப்பினரும் ஆயத்தமாகினர்.

இந்நிலையில், “அப்துல்கலாம் பெயரில் விருது, அவரது பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்து சிறப்பு செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாகவுக்கு நன்றி எனவும் இந்த நிகழ்வை பாராட்டும் விதமாக இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது” என்ற அறிவிப்புடன் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் கூடிய பிளக்ஸ் பேனர் ஒன்று கலாம் சிலை அருகே நேற்று முன்தினம் இரவு வைக்கப்பட்டது.

இதையடுத்து, கலாம் சிலையை அகற்றும் முயற்சியை தற்போது அரசு அலுவலர்கள் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பெரியார் நகரைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை உலகமே போற்றுகிறது. அந்தவகையில்தான் இந்த வார்டு மக்கள் சார்பில் அவருக்கு சிலை வைத்தோம். திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால், அனுமதி பெறாமல் வைத்ததை காரணம்காட்டி, இந்த சிலையை அகற்ற அரசு அலுவலர்கள் முயற்சிப்பது வேதனைக்குரியது.

சிலையை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு தாமாக முன்வந்து இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். முதல்வர் படத்துடன் பேனர் வைத்தபிறகு அலுவலர்களின் கெடுபிடி குறைந்துள்ளது. இதனால் சிலையை அகற்ற வாய்ப்பில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in