பிரதமர் கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு 7 ஒப்பந்த ஊழியர்கள் கைது, 6 பேர் பணி நீக்கம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை
விவசாயிகளுக்கான, பிரதமரின் கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் சிபிசிஐடி போலீஸாரால் 7 ஒப்பந்த ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும்,6 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு உதவிட ‘பிரதமர் கிசான்நிதியுதவித் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத ஏராளமான போலி பயனாளிகள் இதில் சேர்ந்து பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இத்திட்டத்தில் ரூ.110 கோடிஅளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் பேரில்,மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, வல்லம் வட்டார வேளாண் துறை அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவில் வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேளாண் துறை ஒப்பந்த தொழிலாளர்கள் வெங்கடேசன், புஷ்பராஜ், பழனிகுமார், பாரி, மாயவன், பிரகாஷ், பாலகிருஷணன் ஆகிய 7 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவியல் நடுவர், அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில், அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் முகையூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களான பயிர் அறுவடை பரிசோதகர்கள் ராஜ்குமார், வீரன், அண்ணாமலை, வேல்முருகன், கிருபாநந்தம், சுஜிதா ஆகிய 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சம் போலி பயனாளி
“விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1.03 லட்சம் போலி பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 27 ஆயிரம் பேர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மோசடி செய்தவர்களிடம் இருந்து, இதுவரை ரூ.7.5 கோடி பணம் திரும்ப பெறப்பட்டு, அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை இருக்கும்” என்று வேளாண்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
