Published : 15 Sep 2020 07:33 AM
Last Updated : 15 Sep 2020 07:33 AM

ரத்த சோகையை தடுக்க குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதார அமைச்சர் தொடங்கிவைத்தார்

ரத்த சோகையை தடுக்க குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் குருநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு குடற்புழு நீக்க முகாம் இன்று (14-ம் தேதி) முதல் வரும் 28-ம் தேதி வரை 3 சுற்றுகளாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. முதல் சுற்று19-ம் தேதி வரையும், 2-வது சுற்று 21 முதல் 26-ம் தேதி வரையும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த மாத்திரை மூலம் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வுக்கு யார் காரணம்?

‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘2010-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியோடு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுகவும் கைகோத்துக் கொண்டு ‘நீட்’ தேர்வுக்கான கொள்கை முடிவை அறிமுகப்படுத்தினர். அன்று ‘நீட்’டை கொண்டு வந்துவிட்டு இன்று ‘நீட்’டுக்கு எதிராக போராடுகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே ‘நீட்’ தேர்வை எதிர்த்து வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் தடையும், விலக்கும் பெற்று இருக்கிறோம். நீட் தேர்வு தேவையில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x