Published : 15 Sep 2020 07:22 AM
Last Updated : 15 Sep 2020 07:22 AM

திமுக காணப்போகும் வெற்றிக்கு முப்பெரும் விழா முன்னோட்டமாக அமையும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள், செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள். இந்த 3 விழாக்களையும் இணைத்து கருணாநிதி முப்பெரும் விழாவாக்கினார். அந்த வழியில் இந்த ஆண்டும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கமாக முப்பெரும் விழா, ஒரு மாநாடு போல நடைபெறும். கரோனா பேரிடர் காலம் என்பதால் இம்முறை அந்த வாய்ப்பு அமையவில்லை. ஊரடங்கு கால விதிமுறைகளை மீறாமல், பாதுகாப்பு, தனிமனித இடைவெளியுடன் செப்.15-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

கருணாநிதியும், க.அன்பழகனும் இல்லாத நிலையில் முப்பெரும் விழாவுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

‘பெரியார் விருது' திமுகவின் முன்னோடி மா.மீனாட்சிசுந்தரம், ‘அண்ணா விருது' காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அ.ராமசாமி, ‘கலைஞர் விருது' முன்னாள் எம்எல்ஏவான எஸ்.என்.எம். உபயதுல்லா, ‘பாவேந்தர் விருது' முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி, ‘பேராசிரியர் விருது' சுப.ராஜ கோபால் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

முப்பெரும் விழா மூலம் கிடைக்கும் ஊக்கமும் உற்சாகமும், அடுத்தடுத்து நாம் சந்திக்கும் களங்களுக்கேற்ற வலிமையைத் தரக்கூடியவை. எனவே, இந்த முப்பெரும் விழாவை திமுக காணவிருக்கும் அடுத்தடுத்த வெற்றி விழாக்களுக்கான முன்னோட்டமாகக் கருதுகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x